உடுமலை அருகே குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச்செல்ல தயாரான உறவினர்கள். 
தமிழகம்

கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி சென்ற உறவினர்கள் - அவலத்தால் குழிப்பட்டி மலைவாழ் கிராம மக்கள் ஆவேசம்

செய்திப்பிரிவு

உடுமலை: உடுமலை அருகே குழிப்பட்டி மலைவாழ்கிராமத்தில் போதிய சாலை வசதி இல்லாததால், பிரசவ வலியால் துடித்த மலைவாழ் பெண்ணை தொட்டில் கட்டி, அப்பகுதி மக்கள் தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவத்தை வீடியோ எடுத்த மலைவாழ் மக்கள், ‘எங்களுக்கு சாலை வசதி செய்து தராமல், யாரும் வாக்கு கேட்டு வரக்கூடாது’ என ஆவேசமாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. உடுமலை அடுத்த குழிப்பட்டி, குருமலை,மாவடப்பு உள்ளிட்ட மலைக் கிராமங்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் உள்ளன. இக்கிராமங்களில் சாலை, தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அண்மையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை முதல் குழிப்பட்டி வரை சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், சமீபத்தில் வனத்துறையினர் இப்பணிகளை தடுத்து நிறுத்திவிட்டனர். இந்நிலையில் மாவடப்பு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி நாகம்மாள் ( 21 ) என்பவர், நேற்று முன்தினம் பிரசவ வலியால் துடித்தார். குழிப்பட்டியில் தாய் வீட்டில் இருந்த நாகம்மாளை, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர். போதிய சாலை வசதி இல்லாததால், உறவினர்கள் தொட்டில் கட்டி பொன்னாலம்மன் சோலை வரை, நாகம்மாளை தூக்கிச் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். நள்ளிரவில் நாகம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவவலியில் பெண் துடிதுடித்ததில் இருந்து,தொட்டில் கட்டி கரடுமுரடான மலைப்பாதையில் தூக்கி வந்தது வரை சிலர் வீடியோ எடுத்தனர். அப்போது, ‘எங்களுக்கு சாலை வசதி செய்து தராமல், யாரும் வாக்கு கேட்டு வரக்கூடாது’ என ஆவேசமாக கூறினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து குழிப்பட்டி மலைவாழ் மக்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரக்கோரி போராடி வருகிறோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவசர காலங்களில் மருத்துவ உதவிக்குக் கூட எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. மக்களவைத் தேர்தலில் வாக்கு கேட்டு யார் வந்தாலும் அவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தராததால், இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம், என்றனர்.

SCROLL FOR NEXT