கோவை கணபதியில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அருகில், கோவை வேட்பாளர் கலாமணி ஜெகநாதன். படம்: ஜெ.மனோகரன். 
தமிழகம்

“வாக்காளர்களுக்கு ரூ.500-ஐ கொடுத்துவிட்டு ரூ.500 கோடி எடுப்பதுதான் இன்றைய அரசியல்” - சீமான்

செய்திப்பிரிவு

திருப்பூர் / கோவை: வாக்காளர்களுக்கு ரூ.500-ஐ கொடுத்துவிட்டு ரூ.500 கோடி எடுப்பதுதான் இன்றைய அரசியலாக மாறிவிட்டது என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து, அவிநாசியில் நேற்று தேர்தல் பரப்புரையில் சீமான் ஈடுபட்டார். அவர் பேசியதாவது: உண்மையும், நேர்மையுமாக இருக்கவே நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது. ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும். இங்கு யாருக்கும் கொள்கை, கோட்பாடு இல்லை. ஆகவே தான் தனித்து களம் காண்கிறோம். வாக்களிக்க எதற்கு பணம்? பணம் கொடுத்து வாக்கு பெறுபவர் சேவை செய்வாரா? ரூ.500-ஐ கொடுத்து ரூ.500 கோடியை எடுப்பதுதான் அரசியலாக மாறிவிட்டது.

தூண்டிலில் புழுவை போட்டு மீன் பிடிப்பது போல மாறிவிட்டது. அரசியல் என்பது மக்களுக்கான சேவை என்றார் காமராஜர். அரசியல் என்பது மக்கள் மீது செலுத்தப்படும் அதிகாரம் அல்ல. இந்த மண்ணில் அனைத்து உயிர்களுக்குமான அரசியலை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். உலகில் 2 விழுக்காடு தண்ணீர் தான் உள்ளது. உலக உயிர்களின் தேவையான தண்ணீரை விற்பவன் கொடியவன். தமிழ்நாட்டில் 32 ஆறுகள் இருந்தன. அனைத்தும் மணல் அள்ளி செத்துவிட்டன. ஆற்று மணலை முடித்துவிட்டு, இன்றைக்கு மலையை எம் சாண்ட் என்ற பெயரில் நொறுக்க தொடங்கிவிட்டனர்.

பொருளாதார வீழ்ச்சிக்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகியவைதான் காரணம் என உலக வங்கி சொல்கிறது. இதற்கு பாஜகவிடம் பதில் உள்ளதா? தேர்தல் வரும்போது காஸ் விலை குறைப்பு, கச்சத்தீவை மீட்பது என போலி அக்கறை காட்டுகிறார்கள். உண்மையிலேயே ராமர் இருந்தால், இவர்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது. கிறிஸ்தவர், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லையென்றால், திமுக காணாமல் போயிருக்கும். 15 சதவீதம் வாக்கை கண்ணை மூடிக்கொண்டு போடும் இளைஞர்கள் சிந்தியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கலாமணி ஜெகநாதனுக்கு ஆதரவாக கணபதியில் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “பத்து ஆண்டுகள் இந்தியாவை ஆண்டுவிட்டு, தற்போது புதிய இந்தியாவை கட்டமைப்போம் என பாஜகவினர் கூறுகின்றனர்.

என் மண், என் மக்கள் என்பது என் தமிழ் தேசிய அரசியலாகும். பாஜகவிடம் ஒரு கருத்தும், கோட்பாடும் கிடையாது. கையை ஆட்டுவதும், ரோடு ஷோ நடத்துவதும் தான் அவர்களுக்கு தெரியும். ஸ்மார்ட் சிட்டி என நகர்ப் புற வளர்ச்சியை மட்டுமே அவர்கள் கட்டமைக் கின்றனர். ஸ்மார்ட் வில்லேஜ் வர வேண்டும். கிராமங்கள் காலியானால், நாடு வறுமையை சந்திக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT