தமிழகம்

போரூர் பைபாஸ் சாலையில் புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.)4-வது வழித்தடம் ஒன்றாகும்.

இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல்பூந்தமல்லி வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் 9 சுரங்கமெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைய உள்ளன.தற்போது உயர்மட்ட, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி பல்வேறுஇடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, போரூர்பைபாஸ் சாலையில், புதிய மெட்ரோரயில் நிலையங்கள் அமைக்கும்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - பூந்தமல்லி வரையில் உயர்மட்டப் பாதைஅமைக்கப்படுகிறது. இதற்கான60 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

போரூர் பைபாஸ் சாலை மேல் பகுதியில், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகள் வந்து செல்ல வசதியாக, நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், கழிப்பிடங்கள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

இங்கிருந்து இணைப்பு வாகனங்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தடத்தில், கோடம்பாக்கம் வரையிலான பணிகளை டிசம்பரில் முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT