சென்னை: பக்தர்கள் காணிக்கையாக அளித்தநிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடலூர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு அருகில் வள்ளலாரின் ஆன்மீகசேவைக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த சுமார் நூறு ஏக்கர் இடம் உள்ளது. இங்குவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தமிழக அரசுஅறிவித்தது.
வள்ளலாரின் நோக்கத்துக்கு எதிராக, வள்ளலாரின் பெருவழி தத்துவத்துக்கு எதிரான தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ஆரம்பம் முதலே இந்து முன்னணி கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய பக்தர் களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திபோராட்டமும் நடத்தியது.
மேலும் தமிழக அரசு திட்டமிட்டுள்ள வள்ளலார் சர்வதேச மையம் அரசின் இடத்தில் அமையவேண்டும். அதில் வள்ளல் பெருமகனார் வாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்ந்த ஆன்மீக அற்புதங்களை முதன்மைப்படுத்த வேண்டும். திமுகவின் கொள்கைகளை எந்த வகையிலும் மறைமுகமாகக் கூட திணித்து வள்ளலாரின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்த முனைந்தால் இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கும்.
இந்நிலையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட குழிகளில் இறங்கி கிராமமக்கள் ஜனநாயக வழியில் தன்னெழுச்சியாக போராடி உள்ளனர். மக்களின் விருப்பத்துக்கு இந்து முன்னணி ஆதரவை தெரிவிக்கிறது. ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துபவர்களை அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி பார்ப்பதைவிட வள்ளலார் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசு உணர வேண்டும்.
அதே வேளையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தல் காலம் என்பதால் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கில் பிரிவினைவாத அமைப்புகள் பொதுமக்களிடைய ஊடுருவி, தன்னெழுச்சியாக அமைதியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை வன்முறையாக மாற்ற இங்கும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
எனவே தமிழக அரசு விழிப்புடன் நடந்து கொண்டு, வள்ளலார் பக்தர்களின் விருப்பத்துக்கு இணங்க சத்திய ஞான சபை பெருவெளியில் திட்டமிட்ட கட்டிட கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்.மக்கள்விருப்பத்துக்கு எதிராக சர்வாதிகாரியாக செயல்படுவதை திமுகஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.