தமிழகம்

இறைச்சிக்காக அனுப்பப்படும் மாடுகள் உரிய சான்றிதழ்களுடன் கொண்டு செல்லப்படுகிறதா? - ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இறைச்சிக்காக அனுப்பப்படும் மாடுகள் விலங்குகள் நல வாரியத்தின் உரிய சான்றிதழ்களுடன் தான் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கண்காணி்த்து ஆய்வு செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல் தமிழகத்தில் உள்ள நாட்டு மாடுகளை இறைச்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு அடிமாடுகளாக வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சோதனை நடத்த தமிழக அரசு மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

‘தமிழகத்தில் இருந்து உரிய சான்றிதழ்கள் இல்லாமல் மாடுகளை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது என கடந்த 2002-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.

இதுதொடர்பாக தொடரப்பட்டநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உரிய அனுமதியுடன் மட்டுமே மாடுகள் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என டிஜிபி தரப்பில் உறுதியளிக்கப்பட்ட பிறகும், எந்தவொரு சான்றிதழ்களும் இல்லாமல் சட்டவிரோதமாக தமிழக மாடுகள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்படுகின்றனர்’ என மனுவில் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயணா பிரசாத்ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போதுதமிழக அரசு தரப்பில், உரியஅனுமதியின்றி மாடுகளை கொண்டு சென்றதாக 378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகள், விலங்குகள் நல வாரியத்தின் உரிய சான்றிதழ்களுடன்தான் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும். காவல்துறையினரும் அதுதொடர்பான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்.

விதிமீறல்கள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக தமிழக டிஜிபி கடந்த 2007-ம் ஆண்டு பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை அதிகாரிகள் கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப்.24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT