தேனியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. (வலது) கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பகுதியினர். படம்: நா.தங்கரத்தினம் 
தமிழகம்

“தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் போன்ற பச்சோந்திகளை டெபாசிட் இழக்கச் செய்வீர்” - இபிஎஸ்

செய்திப்பிரிவு

தேனி: அதிகாரத்துக்காக கட்சி மாறும் தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி.தினகரன் போன்ற பச்சோந்திகளை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும், என முன்னாள் முதல்வர் பழனிசாமி தேனி, திண்டுக்கல்லில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, முன்னாள் முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார். தேனி பங்களா மேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: அதிமுகவில் இருந்தபோது உங்களிடம் ஒட்டுக்களை பெற்று விட்டு, இன்று பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் கட்சி மாறியவர்கள் மீண்டும் இங்கு போட்டியிடுகிறார்கள். திமுகவை தீயசக்தி என்று எம்ஜிஆர் குறிப் பிட்டார். ஆனால், இரட்டை இலை சின்னத்தில் எம்.எல்.ஏ., எம்.பி.யாக உயர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், இன்று திமுக வேட்பாளராக உள்ளார்.

14 ஆண்டுகள் தொகுதி பக்கமே வராத டி.டி.வி.தினகரன் இன்றைக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். ஸ்டாலின் பொம்மை முதல்வராக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அதேபோல், திமுக வின் 38 எம்.பி.க்கள் தமிழகத்துக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிகாரத்துக்காக கட்சி மாறும் பச்சோந்திகளுக்கு இந்த தேர்தலில் உரிய தண்டனை அளிக்க வேண்டும். தங்க தமிழ்ச் செல்வன், டி.டி.வி. தினகரன் ஆகிய இருவரையும் டெபாசிட் இழக்கச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து, திண்டுக்கல் மணிக் கூண்டு பகுதியில் நேற்று இரவு அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: திமுகவினர் தேர்தல் பத்திரம் பற்றி பேசுவது, பெரிய திருடனைப் பார்த்து சின்ன திருடன் பேசுவது போல் உள்ளது. ஸ்டாலினுக்கு தேர்தல் பத்திரம் பற்றி பேச தகுதியில்லை. கடந்த 3 ஆண்டுகளில் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.656 கோடி திமுகவுக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால், ரூ.6,000 கோடி ஏன் வரவில்லை என ஸ்டாலின் புலம்புகிறார். ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடமிருந்து ரூ.550 கோடி திமுகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் வந்துள்ளது. திமுகவுக்கு பெட்டி வாங்கித்தான் பழக்கம். கரோனா காலம், புயல், வெள்ளம் உள்ளிட்ட அனைத்து பேரிடர்களையும் சமாளித்து மக்களுக்கு உதவி செய்தோம். ஆனால், வந்த ஒரு புயல் வெள்ளத்துக்கே கதறுகிறார் ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT