பெரம்பலூர்: பெரம்பலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் நேற்று மாலை வி.களத்தூர் கிராமத்தில் பிரச்சாரம் செய்தனர்.
அப்போது ஆ.ராசா பேசியது: பிரதமர் மோடியின் தவறை சுட்டிக் காட்டிய ஒரே காரணத்துக்காக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று சிறையில் இருக்கிறார். அதேபோல, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும் சிறையில் இருக்கிறார். எதிர்த்து பேசினால் உடனே சிறைவாசம். இது தான் மோடி ஸ்டைல். எனவே, இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. அதற்கு திமுக வேட்பாளர் அருண் நேருவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
மமக தலைவர் ஜவாஹிருல்லா பேசியது: 10 ஆண்டாக சிலிண்டர் விலையை குறைக்காத மோடி, தேர்தல் வருவதால் மகளிர் தினத்துக்காக எனக் கூறி ரூ.200 குறைத்துள்ளார். குறைந்த பட்ச இருப்பு இல்லை எனக் கூறி ஏழை, எளிய மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிக்கப் படுகிறது. எனவே, இந்த ஆட்சியை விரட்ட அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து, அருண் நேருவை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றார். பிரச்சாரத்தின்போது, திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் நேரு பிரச்சாரம்: இதேபோல, கரூர் மாவட்டம் குளித் தலை பகுதியில் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: முசிறி, மண்ணச் சநல்லூர், குளித்தலை, கிருஷ்ண ராயபுரம் ஆகிய பகுதிகளுக்கு காவிரியில் நீரேற்று நிலையம் அமைத்து விவசாயிகள், மக்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் உருவாக்கப்படும் என்றார்.