பேனர் வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ள மலைவாழ் மக்கள் 
தமிழகம்

‘வாக்கு சேகரிக்க யாரும் வராதீங்க’ - ஜவ்வாதுமலையில் பேனர் வைத்து மலைவாழ் மக்கள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் புங்கம்பட்டு நாடு, புதூர் நாடு மற்றும் நெல்லிவாசல் நாடு ஆகிய 3 ஊராட்சிகளில் 32 குக்கிராமங்கள் உள்ளன. இந்த 3 ஊராட்சிகளில் ஏறத்தாழ 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் வசிக்கின்றனர்.

இந்த 3 ஊராட்சிகளில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் மலை கிராமங்களில் சாலைவசதி, பேருந்து வசதி, பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மலைவாழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மலை கிராம மக்கள் வரும் மக்களவைத் தேர்தலை புறக் கணிக்க போவதாக கடந்த மாதம் நடைபெற்ற 32 கிராம மக்கள் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே தங்கள் கிராமத்துக்கு எந்தவொரு அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் என ஆங்காங்கே பேனர்கள் வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது, ‘‘ஜவ்வாதுமலையில் உள்ள 3 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. குறிப்பாக, புங்கம்பட்டு நாடு ஊராட்சியில் உள்ள கிளானூர், கொத்தனூர், பேளூர், கோவிலூர், கல்லாவூர், சின்னவட்டனூர், பெரும்பள்ளி, சேர்க்கானூர், ரங்க சமுத்திரம், நடுவூர், கம்புக்குடி, பழைய பாளையம், தகரகுப்பம் உள்ளிட்ட மலை பகுதியில் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. மலையில் விளையும் காய்கறி, பழ வகைகள், சிறுதானியங்கள், புளி, கீரை உள்ளிட்ட உணவு வகைகளை நகர் பகுதியில் தான் சந்தைப்படுத்த வேண்டும்.

ஆனால், அதற்கான போக்குவரத்து வசதி இல்லாததால் மலையில் இயற்கை முறையில் விளை விக்கும் பொருட்களை எங்களால் நகர் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியவில்லை. அதேபோல, மருத்துவ வசதியும் எங்கள் பகுதியில் இல்லை. இதனால், கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி வந்துவிட்டால் ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை. டோலி கட்டி தூக்கி செல்லும் நிலை இன்றளவும் உண்டு. மண் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன.

எங்கள் மலை கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கடந்த 75 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்கள் பிரச்சினையை தீர்க்க எந்த அரசாங்கமும் முன்வர வில்லை. எனவே, வரும் மக்களவைத் தேர்தலை மலை கிராம மக்கள் புறக்கணிக்க முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பு பலகை ( பேனர் ) மலை பகுதியில் வைத்துள்ளோம். ஆகவே, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் யாரும் எங்களிடம் வாக்கு கேட்டு வர வேண்டாம். எங்கள் நிலையை சரி செய்த பிறகு நாங்கள் தேர்தலில் வாக்களிக்கிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT