புதுச்சேரியில் ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைரத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
தமிழகம்

புதுச்சேரியில் ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் பறிமுதல் - பறக்கும் படை நடவடிக்கை  

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி மக்களவை தேர்தலையொட்டி மாநில எல்லை உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர காண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த மினிவேனை கோரிமேடு எல்லை பகுதி சோதனைச் சாவடியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா தலைமையிலான தேர்தல் பறக்கும்படை குழுவினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அலுமினியப் பெட்டிகளில் பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வைரங்கள் இருந்தது தெரியவந்தது.

மேலும் சென்னையில் உள்ள தனியார் தங்க நகை செய்யும் இடத்தில் தயாரிக்கப்பட்ட நகைகள் மற்றும் வைரங்கள் புதுச்சேரியில் உள்ள 4 பிரபல நகை கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவதும், ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாதததும் தெரியவந்தது.

இதையடுத்து சந்தேகம் இருப்பதால் நகைகள் மற்றும் வைரங்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அவற்றை புதுச்சேரி அரசு கணக்கு மற்றும் கரூவூலத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கூறும்போது, “பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் வைரங்களின் மதிப்பு சுமார் ரூ.3.5 கோடி இருக்கும். இந்த நகைகளை தமிழகப் பகுதிகளுக்குள் கொண்டு செல்வதற்கான ஆவணங்களை வைத்துள்ளனர்.

ஆனால் புதுச்சேரிக்குள் எடுத்து வருவதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் சந்தேகம் இருப்பதால் அவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இது தொடர்பான விசாரணைக்கு புதுச்சேரி வணிக வரித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். தற்போது அவற்றை கணக்கு மற்றும் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளோம்” என்றனர்.

SCROLL FOR NEXT