தமிழகம்

‘ஸ்டார் தொகுதி’ தேனி களம் எப்படி? - ஒரு பார்வை

என்.கணேஷ்ராஜ்

தேனி மாவட்டம் ஸ்டார் அந்தஸ்து பெற்ற பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. 1977-ம் ஆண்டு நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் தமிழக அளவில் இத்தொகுதி கவனம் ஈர்த்தது.

தொடர்ந்து போடி தொகுதியில் 1984-ல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், 1989-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அடுத்தடுத்து ஜெயலலிதா 2 முறை ஆண்டிபட்டியில் வெற்றி பெற்றார். நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா ஒருமுறை போடியில் போட்டியிட்டார்.

மாவட்ட தலைநகரான தேனிக்கு மக்களவைத் தொகுதி என்ற அங்கீகாரம் ஆரம்பத்தில் இல்லை.பெரியகுளம் மக்களவைத் தொகுதியின் ஒரு அங்கமாகவே இருந்தது. அத்தொகுதி பெரியகுளம், தேனி, போடி, கம்பம், ஆண்டிபட்டி, சேடபட்டி சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் பெரியகுளம் தொகுதி நீக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடி ஆகிய தொகுதிகளுடன் மதுரை மாவட்டத்தின் சோழ வந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளும் இணைக்கப்பட்டன.

தேனி தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 3 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களோடு சேர்த்து மொத்தம் 17 முறை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக 2 முறையும், சுதந்திரா கட்சி, இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் (2019) பிரதான வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

இங்குள்ள 6 சட்டப்பேரவை தொகுதியில் ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், சோழவந்தான் தொகுதிகளை திமுகவும், உசிம்பட்டி, போடி தொகுதிகளை அதிமுகவும் தங்கள் வசம் வைத்துள்ளன. தற்போது திமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும், அதிமுக சார்பில் நாராயணயசாமியும், பாஜக. கூட்டணியில் அமமுக வேட்பாளராக டிடிவி. தினகரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் மதனும் களத்தில் உள்ளனர். சுயேச்சைகள் உட்பட 25 பேர் போட்டியிடுகின்றனர்.

தங்க தமிழ்ச்செல்வன் நீண்ட காலமாக தொகுதியிலேயே வசித்து வருபவர். ஆளும் கட்சி என்பதுடன் திமுக செய்த திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் அவருக்கு உறுதுணையாக உள்ளன. தேனியில் திமுக வெற்றி பெறாவிட்டால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என பி.மூர்த்தி கட்சி நிர்வாகிகளை எச்சரித்துள்ளார்.

அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணசாமி பொதுமக்களுக்கு புதுமுகமாக தெரிந்தாலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருப்பவர். சாதாரண தொண்டனுக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்த ஜெயலலிதாவின் ஃபார்முலாபடி, ஒன்றியச் செயலாளரான இவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். டிடிவி. தினகரன் ஏற்கெனவே தொகுதியில் பரிச்சயமானவர். கடந்த காலத்தில், இவர் இத்தொகுதியில் செய்த வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதில் சுவாரஸ்யம் என்னவெனில் மேற்கண்ட 3 வேட்பாளர்களுமே அதிமுகவில் இருந்தவர்கள்தான். நாம் தமிழர் கட்சி வேட்பாளரான மதன் புதியவராக இருந்தாலும், சீமானால் கவரப்பட்ட இளையோர் பலர் இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கோரிக்கையாகவே இருக்கும் கோரிக்கைகள்: பெரியகுளம், போடி பகுதியில் மா விவசாயம் அதிகம். அதிக விளைச்சலின்போது விலை கிடைப்பதில்லை. ஆகவே மா பதப்படுத்தும் கிடங்கு, மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை போன்றவற்றை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இதேபோல, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி, தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுதல், கண்ணகி கோயிலுக்கு தமிழக பகுதி வழியே சாலை , வைகை அணையை தூர் வாருதல், மூல வைகையில் அணை கட்டுதல், திண்டுக்கல் - குமுளி ரயில் பாதை திட்டம், உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் தேர்தல் காலத்தில் மட்டுமே நினைவுகூரப்படும் வாக்குறுதிகளாக உள்ளன.

ஆண் வாக்காளர்கள்: 7,97,201

பெண் வாக்காளர்கள்: 8,25,529

இதர வாக்காளர்கள்: 219

SCROLL FOR NEXT