சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் புகழேந்தி (71). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது இறந்தார்.
அவர் மறைவை தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு மாவட்டதேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுதவிர, தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கை செய்யும் நடவடிக்கையில் சட்டப்பேரவை செயலகமும் இறங்கியுள்ளது.
ஒரு தொகுதி காலியானால் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எனவே, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் கேட்டபோது,‘‘ விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் அளித்துள்ளார். இறுதிகட்ட தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆணையம்தான் முடிவு செய்து அறிவிக்கும்’’ என்றார்.