திருச்சி/அரியலூர்: திருச்சியில் 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் ஒப்பந்ததாரர் வீடு மற்றும் கட்டுமான நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்களும், ரூ.50 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
மக்களவை தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக சில அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்ப தாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, கடந்த 5-ம் தேதிதமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அதன்படி, திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்த பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரான எஸ்எம்டி.மூர்த்தி வீட்டில் 5-ம் தேதி இரவு முதலும், பாரதியார் சாலையில் உள்ள அவரது பெட்ரோல் பங்க்கில் 6-ம் தேதி முதலும் நடைபெற்ற இந்த சோதனை நேற்று அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது.
மேலும், அவருடன் தொடர்பில் உள்ள மிளகுபாறையைச் சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகி சதீஷ்குமார் என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், மூர்த்தி வீட்டிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, திருச்சி கே.கே.நகரில் உள்ள ‘ஸ்ரீ இன்ஃப்ராடெக்’ என்ற கட்டுமான நிறுவனத்தில் 2 நாட்கள் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும், ரூ.50 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மா.பிரதீப் குமாருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திமுக நிர்வாகி வீட்டில்... அரியலூர் புது மார்க்கெட் 3-வதுதெருவைச் சேர்ந்தவர் அப்பு (எ) விநாயகவேல்(45). திமுக மாணவரணி முன்னாள் மாவட்ட இணைச்செயலாளர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணி முதல் இவரது வீட்டில் வருமானவரித்துறை அலுவலர் மனோஜ்குமார் தலைமையிலான அலுவலர்கள் சோதனை செய்தனர். மேலும், பெரியார் நகர் 3-வது தெருவிலுள்ள அவரது தந்தை அண்ணாதுரை வீடு, தா.பழூரை அடுத்த ஸ்ரீபுரந்தான் கிராமத்திலுள்ள விநாயகவேலின் மாமியார் ராணி வீடு ஆகிய இடங்களிலும் இந்த சோதனை நடந்தது.
அவருக்கு வந்த வருமானம், தாக்கல் செய்துள்ள வருமானவரி தகவல்கள், அவரின் சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தனர். நேற்று பிற்பகல் வரை இந்த சோதனை நடைபெற்றது.