சென்னை: நாமக்கல் கவிஞரின் மூத்த மகள் ராஜலட்சுமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் மூத்த மகள் ராஜலட்சுமி (91).
இவர், சென்னை ஆழ்வார்ப்பேட்டை சீதாம்மாள் காலனியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார் அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறுகிறது.
ராஜலட்சுமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்தெரிவித்து வெளியிட்ட செய்தியில், ‘‘தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா என்ற அருமையான கவிதை வரிகளைப் படைத்து தமிழர்களின் நெஞ்சங்களில் எல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பவர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை.தமிழக அரசின் தலைமைச் செயலகத்தின் 10 தள கட்டிடம் நாமக்கல் கவிஞரின் உயிர்த்துடிப்பான கவிதை வரிகளைத் தாங்கி நிற்கிறது.
மகத்தான கவிஞரின் மூத்த மகள் ராஜலட்சுமி அனுமந்தன் மறைவு செய்தி அறிந்து வருந்தினேன். ராஜலட்சுமியின் மறைவுக்கு தமிழக அரசின் சார்பில்ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்துவருந்தும் அவருடைய குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.