சென்னை துரைப்பாக்கம் ஓஎம்ஆர் ரேடியல் சாலையில், காரில் மயங்கி கிடந்த ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றிய போக்குவரத்து போலீஸாரை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார். 
தமிழகம்

காரில் மயங்கிய ஓட்டுநர் உயிரை காப்பாற்றிய போக்குவரத்து போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: காரில் மயங்கிய நிலையில் இருந்த ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றிய போக்குவரத்து போலீஸாரை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமைக் காவலர் குணசேகரன், முதல்நிலைக் காவலர்கள் கதிரேசன், அன்சார், பொம்படியன் ஆகியோர் கடந்த 2-ம் தேதி மாலை துரைப்பாக்கம், ஓஎம்ஆர் ரேடியல் சாலை சந்திப்பு அருகே கண்காணிப்புப் பணியில் இருந்தனர்.

அப்போது அங்கு காரை ஓட்டி வந்த கார் ஓட்டுநர் துரைப்பாக்கத்தை சேர்ந்த ரவீந்தர்சிங் (45) என்பவர் நெஞ்சுவலியால் காரை ஓட்ட முடியாமல், நடுரோட்டில் காரிலேயே மயங்கினார். இதைக் கவனித்த போக்குவரத்து போலீஸார் விரைந்து சென்று, மயங்கிய நிலையிலிருந்த ரவீந்தர்சிங்கை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, அருகில் உள்ளதனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ரவீந்தர்சிங் தற்போது நலமாக உள்ளார். போக்குவரத்து போலீஸார் விரைந்து முதலுதவி அளித்ததோடு, தக்க சமயத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 போக்குவரத்து போலீஸாரையும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் வரவழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

SCROLL FOR NEXT