சென்னை: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ.வும், தமாகா நிர்வாகியுமான வண்ணை மாறன் மறைவுக்கு தமாகா தலைவர்ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபால் என்ற வண்ணை மாறன் (85). தமிழ்நாடு காங்கிரஸ்கட்சியில் மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் 1984 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் தமாகாவில் இணைந்து பணியாற்றி வந்தார். இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார். இறுதிச் சடங்குகள் ராயபுரத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
அவரது மறைவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை: காமராஜர் வழியில் வந்த வண்ணை மாறன், ஜி.கே.மூப்பனார் தலைமையை ஏற்று, அவரோடு அரசியல் பணியாற்றிய பெருமை மிக்கவர். மூப்பனாரின் நம்பிக்கைக்குரியவராக செயல்பட்டவர்.
மூப்பனார் மறைவுக்கு பிறகு எனது தலைமையை ஏற்று தமாகாவில் மாநில துணைத் தலைவராக பணியாற்றிவர். மீனவ சமுதாய பிரதிநிதியாக தனது கடின உழைப்பால் மீனவர்களுக்காக பாடுபட்டவர். அவரை இழந்து வாடும்தமாகாவினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: வண்ணை மாறன் காலமான செய்தி அறிந்து மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன். பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் தலைமையை ஏற்று காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.