சென்னை: சென்னையில் ‘தமிழ் ஜனம்’ எனும் புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்று ஒளிபரப்பு சேவையை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் மது, முதன்மை செயல் அலுவலர் ரமேஷ் பிரபா, நிர்வாக ஆசிரியர் தில்லை, ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் சேதுமாதவன், ஆர்எஸ்எஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் சுனில் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசும்போது, ``தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கக்கூடிய தலைவர் மோடிதான். தமிழ் மொழி, பன்பாடு, கலாச்சாரத்தை போற்றும் தலைவராக மோடி இருக்கிறார்'' என்றார்
மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் பேசும்போது, ``பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் மொழியையும், திருக்குறளையும் மேற்கொள் காட்டி பேசுகிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல போலிச் செய்திகள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஒரு வாக்காளராக, ஒரு குடிமகனாக நாம் அதிகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது: வரும் 2047-ம்ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூலை முடுக்கெங்கும் மக்கள் மோடிக்கு தான் வாக்களிப்போம் என கூறுகிறார்கள்.
திமுகவும், காங்கிரஸும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டன.இந்தியாவின் முக்கியமான நிலத்தைஇலங்கைக்கு கொடுத்து,மீனவர்களின் உணர்வுகளைபுண்படுத்தியதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் அவர் திருவள்ளூர் (தனி) தொகுதி பாஜக வேட்பாளர் பொன். வி.பாலகணபதி, ஸ்ரீரொபெரும்புதூர் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபாலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.