மதுரை பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகம் அருகே திரண்ட நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

ஜாமீனில் வெளிவந்த ‘நியோ மேக்ஸ்’ நிர்வாகிகள் சொத்துகளை விற்பதாக முதலீட்டாளர்கள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனம் கூடுதல் வட்டி மற்றும் இரட்டிப்பு தொகை வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடம் இருந்து கோடிக் கணக்கான ரூபாய் முதலீட்டை திரட்டியது.

ஆனாலும், முதலீட்டாளர்க ளுக்கு உரிய காலத்தில் முதிர்வுத் தொகை மற்றும் வீட்டு மனைகளை வழங்காமல் ஏமாற்றியதாக பலர் புகார் தெரிவித்தனர். இது குறித்து பாதிக்கப்பட்டோர் மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து ’ மனு மேளா’ நடத்தி பாதிக்கப்பட்டோரிடம் புகார்களை வாங்கினர். இந்நிலையில், ‘ நியோ மேக்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் களான கமலக் கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்டோர் மற்றும் துணை நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

கமலக் கண்ணன், பால சுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுவரை ரூ.260 கோடிக்கும் அதிகமான நிறுவன சொத்துகள், பணம், நகை, கார் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் மொத்த சொத்துகளையும் முடக்க, மதுரை பொருளாதார குற்றப் பிரிவு சிறப்பு டிஎஸ்பி மணிஷா தலைமையிலான போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ‘ நியோ மேக்ஸ்’ நிறுவனங்களால் தேனி பகுதியில் பாதிக்கப்பட்டோர் ஒருங்கிணைந்து ‘ தேனி மாவட்ட ‘ நியோ மேக்ஸ்’ முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம்’ என்ற அமைப்பை உரு வாக்கியுள்ளனர். இச்சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும், விருது நகர், ராமநாதபுரம் தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்தும் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற் பட்டோர் மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் திரண்டு புகார் மனுக்களை அளித்தனர். அதில் அவர்கள் ஜாமீனில் வெளிவந்த ‘நியோ மேக்ஸ்’ நிறுவன நிர்வாகிகள் பினாமிகள் பெயரில் மதுரை சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், குற்றாலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள சொத்துகளை விற்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து முதலீட்டாளர்கள் கூறியதாவது: நியோ மேக்ஸ் நிறுவனத்தினர் ஆசை வார்த்தை கூறி எங்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீடாக பெற்றனர். நாங்கள் எங்கள் குழந்தைகளின் காதணி விழா, ராணுவத்தில் ஓய்வு பெற்று கிடைத்த பணம், நகைகளை அடகு வைத்து முதலீடு செய்துள்ளோம். எங்களது முகவர்களிடம் கேட்டால் வழக்கு நடக்கிறது. பொறுமையாக இருங்கள் எனக் கூறுகின்றனர். ஆனாலும், சில மாதங்களாக வட்டித் தொகையும் கொடுக்க வில்லை.

இருப்பினும், முகவர்கள் சிலர் மிரட்டியதால் புகார் கொடுக்கத் தயங்கினோம். தற்போது இந்த வழக்கில், ஜாமீனில் வெளியே வந்துள்ள நிறுவன இயக்குநர்கள் நிலங்களை சட்டவிரோதமாக விற்று வருகின்றனர். இதை பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். எங்களது முதலீடு திரும்பக் கிடைக்குமா எனச் சந்தேகம் எழுகிறது. எங்களது முதலீட்டுத் தொகையை திரும்பப் பெற்றுத்தர வேண்டும். முகவர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று கூறினர்.

SCROLL FOR NEXT