ராஜபாளையம்: “தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. ஆனால், இண்டியா கூட்டணி தலைவர்கள் தங்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்” என ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் பேசினார்.
தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை ஆதரித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் மாலை பிரச்சாரம் செய்தார். ராஜபாளையம் சொக்கர் கோயில் முதல் பழைய பேருந்து நிலையம் வரை திறந்த வாகனத்தில் ஊர்வலமாக (ரோடு ஷோ) சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது: “பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை ஏற்று ஜான்பாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இங்கு வந்துள்ளேன். இப்பகுதியில் முக்கிய தலைவரான ஜான்பாண்டியன் வெற்றி பெற்றால், உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவார்.
தேசிய ஜனநாயக கூட்டணி பாரத நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. இண்டியா கூட்டணி, அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா சொல்வதை உலக நாடுகள் கேட்கவில்லை. ஆனால், மோடி பிரதமராக வந்தபின், பாரத தேசம் என்ன சொல்கிறது என்பதை உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. இதுதான் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு காங்கிரஸுக்கும் உள்ள வேறுபாடு.
காங்கிரஸ் ஆட்சியில் உலகப் பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது உலக அளவில் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரும்போது, 2027-ல் உலக அளவில் 3-வது பெரிய பொருளாதார நாடக இந்தியா உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடியின் சங்கல்பமான 2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறுவதற்கும், உலகின் சூப்பர் பவராக மாறுவதற்கும் ஜான்பாண்டியன் வெற்றி அவசியமாகிறது. கடந்த காலங்களில் பாரத நாட்டின் மீது அண்டை நாடுகள் தாக்குதல் நடத்தி வந்தன. இன்று இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிரி நாடுகள் அச்சப்பட்டு கொண்டிருக்கிறது.
ஜான் பாண்டியனை வெற்றி பெற வைத்து மக்களவைக்கு நீங்கள் அனுப்பினால், நன்றி சொல்வதற்காக உங்களை பார்க்க மீண்டும் வருவேன்” என்றார். வேட்பாளர் ஜான்பாண்டியன், பாஜக மாவட்டத் தலைவர் சரவணதுரை ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.