தமிழகம்

‘ஸ்டார் தொகுதி’ தென்சென்னை கள நிலவரம் சொல்வது என்ன? - ஒரு பார்வை

சி.பிரதாப்

கோடை வெயிலின் அனலைவிட தென் சென்னை தேர்தல் களத்தில் அதிகமான உக்கிரத்தை காணமுடிகிறது. விட்டதை பிடிக்க அதிமுகவும், இருப்பதை தக்கவைக்க திமுகவும், வெற்றியை மலர செய்ய பாஜகவும் கடுமையாக மல்லுக்கட்டுவதால் தென்சென்னை தொகுதி முழுவதும் அனல் பறக்கிறது.

இந்த போட்டிக்கு வலுசேர்க்கவே தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை பாஜக தலைமை களமிறக்கி இருப்பதால் தற்போது இந்த தொகுதியானது நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. நாட்டின் முதல் நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ண மாச்சாரி, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் என மிகப்பெரிய ஆளுமைகள் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி தென் சென்னை. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு தென் சென்னையில் விருகம் பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் இணைக்கப்பட்டன.

இதில் சோழிங்கநல்லூர் பேரவைத் தொகுதி தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்டதாகும். மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழமையான கோயில்கள், சுற்றுலாப் பகுதிகள், பிரபலமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இத்தொகுதியில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். முழு நகரமயமான இந்தத் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கின்றனர். அதிக அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட தொகுதி.

வெளிமாநிலத்தவர், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெருமளவில் வசிக்கின்றனர். எனவே, வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் என எதிர்பார்க்க முடியாது. மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை தென் சென்னை தொகுதியானது பெரும்பாலும் திமுக வசமே அதிக முறை இருந்துள்ளது. அந்த வகையில் 1957 முதல் இதுவரை நடைபெற்ற 17 தேர்தல்களில் திமுக 9 முறையும், அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்சமாக திமுகவின் டி.ஆர்.பாலு இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றுள்ளார்.

இத்தொகுதி உருவாகி, 34 ஆண்டுகளுக்குப் பின்னரே 1991 மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக அதிமுக வெற்றியை ருசித்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர்.தரன் வெற்றிபெற்றார். கடந்த தேர்தலில் திமுக, அதிமுக, மநீம இடையே மும்முனை போட்டி நிலவிய போதிலும், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் 50 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.

அவர் 5 லட்சத்து 64,872 வாக்குகள் பெற்ற நிலையில், அதிமுகவின் ஜெயவர்தன் 3 லட்சத்து 2,649 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மக்கள் நீதி மய்யத்தின் ரங்கராஜன் ஒரு லட்சத்து 35,465 வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்தார். 2.62 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழச்சி வெற்றிவாகை சூடினார்.

இந்த முறை தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெ.ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக), சு.தமிழ்ச்செல்வி (நாம் தமிழர்) என 41 பேர் போட்டியிடுகின்றனர். களத்தில் 4 முனைப் போட்டி நிலவினாலும் அதிமுக, திமுக, பாஜக இடையேதான் கடும் பலப்பரீட்சை நடக்கிறது.

இதையடுத்து தொகுதி முழுவதும் திமுக, அதிமுக, பாஜக சார்பில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணி கட்சிகளுடன் அசுர பலத்துடன் நிற்கும் திமுக, பிரதான எதிர்க்கட்சி என்பதோடு பழக்கப்பட்ட தேர்தல் நுணுக்கங்களோடு களமாடும் அதிமுக, அதீத உற்சாகத்துடன் வலம்வரும் பாஜக என தென்சென்னை முழுவதும் தேர்தல் பரபரப்பு காணப்படுகிறது. முக்கிய கட்சிகளின் 3 வேட்பாளர்களும் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள் என்பதால், தென் சென்னையில் வெற்றியை பெற போவது யார் என்ற ஆவல் மக்களிடம் இருந்து வருகிறது.

தீர்க்கப்படாத பிரச்சினைகள்: வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பணிகள் முழுமை பெறாதது, சோழிங்கநல்லூரில் மத்திய அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்காதது, சில இடங்களில் குடிநீர் இணைப்புகள் முழுமை பெறாதது, மேடவாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் இணைப்புகள் தரப்படாதது போன்ற குறைகளை மக்கள் குறிப்பிடுகின்றனர். சில இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மந்தகதியிலேயே நடந்து வருகின்றன.

இதனால் மழைக்காலங்களில் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது. இதுதவிர பாலங்கள் அமைக்கப்பட்டும் வேளச்சேரியில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை, பெருங்குடி குப்பைக்கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை, தி.நகர் பேருந்து நிலைய விரிவாக்கம், நடைபாதை கடைகள் அகற்றம், மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றுவது என மக்களின் தீர்க்கப்படாத நீண்டகாலப் பிரச்சினைகளாக உள்ளன.

SCROLL FOR NEXT