தமிழகம்

வாக்குப்பதிவு, எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.17 காலை 10 மணி முதல் ஏப்.19 இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் பொதுத்தேர்தல், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதியும், ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு ஏப் 17-ம் தேதி காலை 10 மணி முதல், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19-ம் தேதி இரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள், இணைக்கப்பட்ட பார்கள் அனைத்தையும் மூட வேண்டும்.

மேலும், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும். மேலும், பீர் மற்றும் மது தயாரிப்பு நிறுவனங்கள் மது விற்பனை மற்றும் மாநிலத்தில் மது பாட்டில்களை வாகனத்தில் கொண்டு செல்வது என அனைத்தையும் தடை செய்வதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT