கொடைக்கானல் அருகேயுள்ள கே.சி.பட்டியில் அறுவடை செய்த மிளகை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள். 
தமிழகம்

மழையின்மையால் மிளகு விளைச்சல் பாதிப்பு: போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை @ கொடைக்கானல்

ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் மிளகு சீசன் தொடங்கியுள்ள நிலையில் எதிர்பார்த்த விளைச்சல் இன்றி விலையும் கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, பட்லாங்காடு, கொடலங்காடு, ஆடலூர், பன்றி மலை, பாச்சலூர், பெரும்பாறை, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிளகு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

மிளகு அறுவடை... மார்ச்சில் தொடங்கி ஜூலை வரைஇங்கு மிளகு அறுவடை நடைபெறும். தற்போது கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் மிளகு அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அறுவடை செய்த மிளகை தரம்பிரித்து வெயிலில் உலர்த்தி விற்பனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் கண்ட நிலையில், இந்தாண்டு போதிய மழையின்மையால் விளைச்சல் குறைந்துள்ளது.

தற்போது ஒரு கிலோ மிளகு ரூ.550 முதல் ரூ.600 வரை விற்பனை ஆகிறது. வரத்து குறைந்து, விலையும் அதிகரிக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், காய் பிடிக்கும் நேரத்தில் எதிர்பார்த்த மழை இல்லாததால் மிளகு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்பார்த்ததை விடவிலை குறைவாகவே விற்கிறது. ஒரு கிலோ ரூ.800 வரை விற்றால்தான் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

SCROLL FOR NEXT