திருப்பூர்: காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டில் எந்த முதல்வரும் அணைகளை கட்டவில்லை என, பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில், வடுக பாளையம்புதூர், வடுக பாளையம், செட்டிபாளையம் பிரிவு, மாணிக்காபுரம், கரடிவாவி, பருவாய், காம நாயக்கன் பாளையம், காரணம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அண்ணாமலை நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில், அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறீர்கள். கஞ்சா நம் வீட்டுக்கு, வீதிக்கு வரக்கூடாது. ஆண்கள் தொழிலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும் என சிந்திக் கிறார்கள். பெண்கள் பாதுகாப்பை பற்றி சிந்திக்கிறார்கள். கான்கிரீட் வீடு கிடைக்குமா? குடிநீர் கிடைக்குமா? என மக்கள் சிந்திக்கிறார்கள். காமராஜர் ஆட்சி காலத்தில் 14 அணைகள் கட்டப்பட்டன. அதன் பிறகு வேறு எந்த முதல்வரும் முயற்சி எடுக்கவில்லை. அதன் தாக்கத்தை காண்கிறோம்.
ரூ.10 ஆயிரம் கோடியில் அணை கட்ட தமிழ்நாடு அரசு தயாராக இல்லை. ஆனைமலை- நல்லாறு திட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம். 100 சதவீதம் நிதி மத்திய அரசு கொடுத்தும், குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்காமல் திராவிட மாடல் அரசு உள்ளது. பிரதமர் மோடி இலவசமாக கொடுக்கக் கூடிய திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக் கிறார்கள். இதையெல்லாம் தடுக்க மாற்றத்தை கொடுக்க என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.