மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு பல்லாவரம் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில்  பெரும்புதூர் தொகுதி வாக்குசாவடிகளில் பணிபுரிபவர்களுக்கு வாக்கு இயந்திரங்கள் மூலம் தேர்தல் அதிகாரிகள் நேற்று பயிற்சியளித்தனர். | படம்: எம்.முத்துகணேஷ் | 
தமிழகம்

மக்களவை தேர்தலில் பணிபுரியும் 19 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகளில் ஈடுபடும் 19 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி நேற்று நடைபெற்றது. அப்பயிற்சி வகுப்புகளை மாவட்டதேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் அளவில் 3,726 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 19,396அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். இந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு 16 இடங்களில் கடந்த மார்ச்24-ம் தேதி நடைபெற்றது.

2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்றும் 16 இடங்களில் நடைபெற்றது. திருவான்மியூர் பாரதிதாசன் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளமாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு, தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்வது குறித்த அறிவுரைகளை வழங்கினார்.

முன்னதாக, மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அண்ணா நகர் ரவுண்டானா பகுதி, கந்தசாமி நாயுடு கல்லூரியிலிருந்து நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில், மாற்றுத் திறனாளிகள் நடைபாதை அருகில் அமைக்கப்பட்ட தேர்தல்விழிப்புணர்வு மணல் சிற்பத்தை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கே.ஜெ.பிரவீன் குமார், இணை தலைமை தேர்தல் அலுவலர் (விழிப்புணர்வு) பெ.அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) ச.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT