சென்னை: பிரதமரின் வருகையால் கடைகள் மூடப்படும் என மக்கள் நினைக்க வேண்டாம் என்று பாஜக வேட்பாளரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி வரும் 9-ம் தேதி சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடி, தென் சென்னை தொகுதி பாஜகவேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து நடைபெறும் திறந்தவெளி வாகன பிரச்சாரத்தில் கலந்து கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
ஆதரவு பெருகும்: இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: பிரதமர் மோடியின் சென்னை வருகை எங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருக்கும். மக்களின் ஆதரவை மேலும் பெருக்கி தரும். பிரதமர் மோடி மக்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.
மக்கள்அவரை பார்க்கும்போது, நமதுபிரதமர் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்ற எண்ணம் மக்களுக்கு நிச்சயம் வரும். பிரதமரின் வாகன பேரணிக்கு (ரோட் ஷோ) எந்த தடையும் இல்லை. காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்திருக்கிறது.
இடையூறுகள் இருக்காது: இதையொட்டி, காவல்துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் பேரில் தயார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல பிரதமர்வருகிறார் என்பதற்காக பாண்டிபஜாரில் கடைகளை மூடிவிடுவார்கள் என்றெல்லாம் மக்கள் நினைக்க வேண்டாம். ஒரு மணி நேரம் நடைபெறும் பிரச்சாரத்தில் 1.5 கிமீ வரை பிரதமர் பிரச்சார வாகனத்தில் பயணம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
இருந்தபோதும் வியாபார ஸ்தலங்கள் அனைத்தும் இப்பகுதியில் திறந்தே இருக்கும். அந்தவகையில் எந்தவித இடையூறுமின்றி பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தரவுள்ளார். அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு வருவதாக இருந்தார். தற்போது அந்த கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.