சிவகங்கை: ‘நான் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( ஹோம் ஒர்க் ), தேர்வு, தனிப் பயிற்சி ( டியூசன் ) இருக்காது’ என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் எம்பி நகைச்சுவையாக தெரிவித்தார்.
சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் அவர் பேசியதாவது: இந்தத் தேர்தல் வேட்பாளரைத் தேர்வு செய்வதை தாண்டி, இந்தியா எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல். நான் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம், தேர்வு, தனிப் பயிற்சி மூன்றையும் தடை செய்து விடுவேன். தேர்தல் முடியும் வரை மொபைல் போனில் யாரும் ‘ஹலோ’ என்று தொடங்க கூடாது. கைச் சின்னம் என்று தான் பேசத் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டன. தற்போது கல்விக் கடன் வழங்கும் வீச்சு குறைந்துள்ளது. மேலும் வேலை கிடைக்காததால் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் தவிக்கின்றனர். இதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். என்னை எதிர்த்துப் போட்டி யிடும் 2 வேட்பாளர்களும் ஊர் வளர்ச்சி, உள்ளூர் அரசியல் குறித்து தெரியாதவர்கள்.
இதனால் அவர்கள் தவறான பிரச்சாரத்தைச் செய்கின்றனர். எனக்கு முன்பு எம்பியாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த செந்தில் நாதன் எத்தனை தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தார். எத்தனை முறை மக்களவையில் பேசியுள்ளார். ஆனால், நான் பலமுறை மக்களவையில் பேசியுள்ளேன். தமிழகத்தில் பாஜகவின் இந்து, இந்துத்துவா அரசியல் எடுபடாது. மாநில அரசால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கையை அந்தந்த மாநிலங் கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இதனால் நீட் தேர்வில் மாநிலங்கள் விருப்பத்துக்கு ஏற்ப விலக்கு அளிக்கப்படும். மாநில அரசுகளுடன் ஆலோ சித்து ஜிஎஸ்டி சீரமைக்கப்படும். மற்ற நாடுகளை போன்று ஒரே ஒரு ஜிஎஸ்டி தான் இருக்க வேண்டும். எனக்கு கட்சியிலும், மக்களிடமும் எதிர்ப்பு கிடையாது. அரசியல் மீது மக்களுக்கு விருப்பம் குறைந்துள்ளது. அதனால் கூட்டங் களுக்கு வருவதில்லை. ஆனால் வாக்களிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.