குப்பை இல்லை; தெரு நாய்கள் இல்லை. கடைகள் மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பணமாக மாறி 45 குடும்பங்களை வாழவைக்கிறது.
கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளயம் ஒன்றியம், குருடம்பாளையம் கிராமத்தில்தான் இந்தப் பணி முழுவீச்சில் நடக்கிறது.
பேட்டரி கார் மூலம் காலை, மாலை வேளைகளில் வீடுகளுக்கும், கடைகளுக்கும் செல்லும் பெண்கள், குப்பைகளை சேகரிக்கின்றனர். அவற்றை ஓரிடத்தில் வைத்து பிரிக்கின்றனர். தேங்காய் கொட்டாங்குச்சிகள் உடைக்காதது என்றால் டன் ரூ.9 ஆயிரம், உடைபட்டு தூள் ஆக்கியது என்றால் ரூ.24 ஆயிரம், முட்டை ஓடு கழுவி, சுத்தம் செய்து தூளாக்கி கிலோ ரூ. 400 என்று நர்சரிகளுக்கு உரமாக விற்பனை செய்கின்றனர். ஓட்டல்களில், கடைகளில் வாங்கி வந்த இலை தழைகளை தனித்தனியே பிரித்தெடுக்கும் இவர்கள், வாழையிலை, காய்கறிக் கழிவுகள், வாழைப்பழ தோலை கழுவி, தாம் வளர்க்கும் 15 மாடுகளுக்கு தீவனமாகத் தருகின்றனர். சாண எரிவாயு தயாரிக்க அவற்றின் சாணத்தை பயன்படுத்துகின்றனர். இந்த எரிவாயுவை சமையலுக்கு பயன்படுத்தி தினமும் 75 பேருக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. இங்கு வளரும் 150 வாத்துகள், இந்த கழிவுகளில் உள்ள புழுக்கள், பூச்சிகளை
உணவாக்கிக் கொள்கின்றன. அந்த வாத்துகள் தினமும் 30 முதல் 40 வரை முட்டைகள் இடுகின்றன. அவற்றை தலா ரூ.8 க்கு விற்கின்றனர்.
குப்பைகள் தரும் வீடுகளுக்கு மாதம் ரூ.30, ஓட்டல், கடைகளுக்கு மாதம் ரூ.100 என வசூலிக்கின்றனர். இப்படி இவர்களது கணக்கில் சேரும் தொகையில் தங்களுக்கான மாத சம்பளம் ரூ.6 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை வங்கிக் கணக்கில் சேர்த்துவிடுகின்றனர்.
ஏதோ ஒரு கல்யாண வீட்டுக்கு சமையல் செய்கிற மாதிரி தினமும் இந்தப் பணியை துரிதமாகச் செய்து முடிக்கும் இங்குள்ள 45 பெண்கள், இது ஒரு ஆரம்பம்தான் என்று சொல்லி திகைக்க வைக்கின்றனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஊராட்சி முகமை, குருடம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், மற்றும் இக் கிராமத்தை சேர்ந்த `வல்லாரை மகளிர் சுய உதவிக் குழு' பெண்கள்தான் இப்படியொரு சாதனையை நிகழ்த்துகின்றனர்.
இந்த திட்டம் அரசு சார்பில் டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. குருடம்பாளையத்தில் ஏப்ரல் மாதத்தில்தான் முழுமையாகப் பணி துவங்கியது. தமிழகத்திலேயே முதன்முறையாக பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் 15 வாங்கப்பட்டது. இதன் மூலம் ஒரு குப்பை மோட்டார் வாகனம் குறைந்த பட்சம் 300 வீடுகளுக்கு தினமும் இருமுறை சென்று திரும்புகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்படியொரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது என்கிறார் குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் ரவி.
‘‘இந்த திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கென 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உரம் சேகரிப்பு, மண்புழு உற்பத்தி மையம், இயற்கை உரம் தயாரிப்பு, இயற்கை எரிவாயு அமைவிடம், சமையல் அறை, குப்பைகள் தரம் பிரிக்கும் இடம் என திட்டமிட்ட தொழிற்சாலை இடம் போலவே உருவாக்கப்பட்டுள்ளது. இப் பணியில் மட்டும் 90 விழுக்காடு பெண்களே ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்கள் ஓட்டுவதற்கு கடினமான பணிகள் செய்வதற்கு மட்டும் சில ஆண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆண்டு முழுவதும் 150 பெண்களுக்கு இதன்மூலம் வேலை கிடைக்கிறது. இன்னும் சில மாதங்களில் இத்திட்டம் தன்னிறைவு பெற்று அரசு நிதி இல்லாமல் கழிவுகளில் இருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டே ஊராட்சியின் முழு நிர்வாகச் செலவையும் மேற்கொள்ள இயலும்’’ என்றார்.
பாலீதின், பிளாஸ்டிக் கழிவுகள், காகிதக் கழிவுகள் இங்கே தனித்தனியாக பிரிக்கப்பட்டு அவை தனியே விற்கப்படுகின்றன. இந்த திட்டம் இந்த அளவு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது இங்கே மட்டும்தான். இதே போன்ற திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தினால், கிராமப்புற சுகாதாரம், கிராமப் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மேம்படும். குறிப்பாக எங்களைப்போன்ற கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரமும் உயர வழிவகுக்கும் என்கிறார்கள் இதில் முழு ஈடுபாடு காட்டி வரும் பெண்கள்.