தமிழகம்

தனியார் நிறுவனத்தின் ‘அக்னிபான்’ ராக்கெட் ஏவுதல் திட்டம் 2-வது முறையாக தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் ‘அக்னிபான் சார்டெட்’ எனும்சிறிய ராக்கெட்டை விண்ணில் ஏவும் திட்டம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியுடன் இணைந்து ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் ஸ்டார்ட் - அப் நிறுவனம் தரமணியில் இயங்கி வருகிறது. ராக்கெட் வடிவமைப்பை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம் இஸ்ரோ உதவியுடன் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்துள்ளது. தனியார் பயன்பாட்டுக்கு சிறிய ரக ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்காக அந்த ஏவு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘அக்னிபான் சார்டெட்’ எனும் சிறிய ராக்கெட்டை அந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. இது சுமார் 300 கிலோ எடை கொண்ட விண்கலத்தை சுமந்து கொண்டு, பூமியில் இருந்து 700 கி.மீ. தூரம்வரை செல்லும் திறன் கொண்டது. 2 நிலைகள் கொண்ட அக்னிபான் ராக்கெட் பகுதி கிரயோஜெனிக் இயந்திரம் மூலம் இயங்கக்கூடியது.

இந்த ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து கடந்த மார்ச் 22-ம் தேதிவிண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இறுதி கட்ட சோதனையின் போது தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் ராக்கெட் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், பழுதுகளை கண்டறிந்து, சரிசெய்யப்பட்டன.

தொடர்ந்து, ‘அக்னிபான்’ ராக்கெட் ஏப்ரல் 6 ( நேற்று ) காலை6 மணி அளவில் விண்ணில்ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், கவுன்ட் - டவுன் தொடங்குவதற்கு முன்பு, ராக்கெட்டில் மேலும் சில தொழில் நுட்ப கோளாறுகள் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராக்கெட் ஏவுதல் திட்டம் 2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டது. தொழில் நுட்ப பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு ‘அக்னிபான்’ ராக்கெட் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என்று அக்னிகுல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT