சென்னை: தனியார் மருத்துவமனையில் ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை அரசு மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார் தொடங்கிஉள்ளார். இத்திட்டத்தில் முதல் நபராக நாகர்கோவில் இளைஞர் பயன்பெற்றுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறையில் பணியாற்றி வருபவர் மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார். ‘மெட்ராஸ் கிட்னி ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள இவர், அதன் மூலம் ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்ற அறிவிப்பை ஃபேஸ் புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் வானொலியில் விளம்பரம் செய்தார்.
இதைப் பார்த்து, சிறுநீரக மாற்றுஅறுவை சிகிச்சைக்காக நாகர்கோவிலைச் சேர்ந்த 18 வயதான டேவிட்சன் அணுகியுள்ளார். ‘ஓ பாசிடிவ்’ ரத்த பிரிவைச் சேர்ந்த டேவிட்சனுக்கு, ‘ஏ பாசிடிவ்’ ரத்த பிரிவைச் சேர்ந்த அவரது தந்தை டேவிட் ஆபிரகாம் சிறுநீரக தானம் கொடுக்க முன்வந்தார். அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர், குறைவான கட்டணம் வசூலிக்கும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையில் டேவிட் சன், டேவிட் ஆபிரகாம் ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் தந்தை டேவிட்ஆபிரகாமிடம் இருந்து ஒரு சிறுநீரகத்தை, மகன் டேவிட்சனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தினர். மருந்துகள் செலவு, மருத்துவமனை கட்டணம் என மொத்தம் ரூ.3.10 லட்சத்தை தனது சொந்த சேமிப்பில் இருந்து மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார் கொடுத்துள்ளார். அதேபோல், அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மூத்த சிறுநீரக மருத்துவர் பலராமன், மயக்கவியல் மருத்துவர்கள் புவனா, பிரவீனாத் மற்றும் மருத்துவர்கள் சிவசங்கர்,மணிகண்டன், தேவ், வெங்கடேஷ்ஆகியோர் எவ்விதக் கட்டணமும்பெறவில்லை.
இது தொடர்பாக ஆண்டன் யுரேஷ் குமார் கூறியதாவது: நான் 1998-ம் ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தேன். அப்போது இருந்த திமுக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் உயர் படிப்புக்கான செலவை ஏற்றது.அந்த திட்டத்தில் நான் பயன்பெற்றதால், கலைஞர் நூற்றாண்டையொட்டி ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளேன்.
அதன்படி, நாகர்கோவில் இளைஞருக்கு இலவசமாக முதல்சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைசெய்யப்பட்டுள்ளது. சக மருத்துவர்கள் எவ்வித கட்டணமும் வாங்காமல் எனக்கு உதவி செய்தனர். நல் உள்ளங்களின் உதவியுடன் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஏழை நோயாளிகள் ‘மெட்ராஸ் கிட்னி ஃபவுண்டேஷன்’ அமைப்பை 9500281116 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.