வெசாக் திருவிழாவை முன்னிட்டு இந்தியாவிலிருந்து இரண்டு பவுத்த புனித சின்னங்கள் முதல்முறையாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள் ளன.
புத்தர் பெருமான் பிறந்தது, ஞானமடைந்தது மற்றும் இறந்தது என மூன்று முக்கிய நிகழ்வுகளும் வெசாக் மாதத்து பவுர்ணமி நாளிலேயே நிகழ்ந்தது. இதனைச் சிறப்பிக்கும் வகையில் இலங்கையில் பவுத்த மக்கள் வெசாக் மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தை வெசாக் பண்டிகையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்த ஆண்டு இலங்கையில் வெசாக் வாரம் ஏப்ரல் 26 (நேற்று முன்தினம்) தொடங்கி மே 2 வரையில் நடைபெறுகிறது. இலங்கை அரசு சார்பாக வெசாக் பண்டிகை நிகழ்வை குருநாகல் மாவட்டம் பிங்கிரியில் தேவகிரி ரஜ மகா மடாலயத்தில் இன்று (சனிக்கிழமை) அதிபர் மைத்ரிபால சிறிசேனா தொடங்கிவைக்கிறார். இதனை முன்னிட்டு தேவகிரி ரஜ மகா மடாலயத்துக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள் ளது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கைக்கு பொதுமக்களின் பார்வைக்காக இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சாரநாத்திலிருந்து மிகவும் புனிதமான இரண்டு பவுத்த சின்னங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இது குறித்து கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவிலுள்ள சாரநாத்தில் புத்தர் பெருமான் தனது முதலாவது போதனைகளை நடத்தியதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. இங்குள்ள முலகன்ட்காகுடி பவுத்த மடாலயத்தில் பாதுகாக்கப்படும் இரண்டு புனிதமான பவுத்த சின்னங்கள் இலங்கைக்கு முதல்முறையாக வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பார்வைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஏப்ரல் 28 முதல் மே 2-ம் தேதி வரை கொழும்பிலுள்ள அலரிமாளிகையில் இந்த புனித சின்னங்களை பொதுமக்கள் பார்வையிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெள்ளிப் பேழையிலான முதலாவது புனித சின்னம் சுமார் 2,100 ஆண்டுகள் பழமையானது. இது 1914-ம் ஆண்டில் சேர் ஜோன் மார் என்ற ஆங்கிலேயரால் புராதன நகரான தக்சிலாவுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாவது புனித சின்னமான பெரிய ஸ்தூபி தொல்பொருள் ஆராய்ச்சியாளரான லோங்ஹேர்ஸ்ட் என்பவரால் 1929-ல் ஆந்திராவின், குண்டூர் மாவட்டத்தில் உள்ள நாகார்ஜூனக்கொண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது. சாரநாத் புனித சின்னங்களை இலங்கையில் காட்சிப்படுத்துவதன் மூலம் இந்தியா - இலங்கை இடையேயான ஆன்மிக பந்தத்தை மேம்படுத்துவதுடன் இரு நாடுகளுக்கிடையே உள்ள பவுத்த பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவும் அமையும் என தெரிவித்தனர்.
புத்தரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வகையில் கோபுர வடிவில் ஓவியம், மின் விளக்கு அலங்கரிக்கப்பட்டிருப்பதை வெசாக் பந்தல் என்று அழைக்கின்றனர்.