தமிழகம்

”கோவைக்கு தேவையான விமான, ரயில் சேவைகளை தொடங்க எம்.பி.க்கள் முனைப்பு காட்ட வேண்டும்”

இல.ராஜகோபால்

கோவை: கோவைக்கு தேவையான விமான, ரயில் சேவைகளை தொடங்க தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,க்கள் முனைப்பு காட்ட வேண்டியது அவசியம் என, பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விமான, ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்தியா மற்றும் துபாய் இடையே விமானப் போக்கு வரத்து தொடர்பான ‘பைலேட்ரல்’ ஒப்பந்தத்தில் கடந்த 2009 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோவையும் இணைக்கப்பட்டது. அப்போது மக்களவை உறுப்பினர்கள் பிரபு,சுப்பராயன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அப்போதைய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் உதவியுடன் கோவை விமான நிலையம் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

அன்றைய சூழலில் இந்தியா - துபாய் ஒப்பந்தத்தின்படி, அனுமதிக்கப்பட்ட 54,200 வாராந்திர இருக்கைகள் முழுவதும் ஏற்கெனவே துபாய் நாட்டின் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தால் இந்தியாவில் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டுவிட்டது. அப்போது எமிரேட்ஸ் நிறுவனம் மட்டுமே சேவை வழங்கி வந்தது. இவை அனைத்தும் ‘வைட் பாடி’ எனப்படும் பெரிய ரக விமானங்கள் ஆகும். இத்தகைய விமானங்களை கோவையில் இயக்க முடியாது என்பதால் எமிரேட்ஸ் நிறுவனம் கோவை மீது ஆர்வம் காட்டவில்லை.

2010-ம் ஆண்டு தான் முதல் முறையாக துபாய் நாட்டின் சிறிய ரக விமான நிறுவனமான ‘பிளை துபாய்’ இந்தியாவிற்கு சேவையை தொடங்கியது. 2014-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி கூடுதலாக 11,000 இருக்கைகள் துபாய் அரசுக்கு இந்தியாவால் வழங்கப்பட்டன. மும்பை மற்றும் டெல்லிக்கு டபுள் டெக்கர் வகை விமானமான ஏர்பஸ் ஏ 380 சேவை தொடங்குவதற்கு தேவையான அதிகப்படியான இருக்கைகளை எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்த 11,000 இருக்கைகளைக் கொண்டு ஈடு செய்தது. இது போன்ற காரணங்களால் தான் ‘பிளை துபாய்’ நிறுவனம் கோவையில் சேவையை தொடங்கவில்லை.

இந்திய விமான நிறுவனங்கள் கோவையில் இருந்து துபாய்க்கு சேவை தொடங்க தடையில்லை. இந்திய விமான நிறுவனங்கள் பெரும்பாலும் மும்பை, டெல்லி, பெங்களூரூ, ஹைதராபாத் ஆகிய தனியார் விமான நிலையங்களில் மட்டுமே அதிக சேவையை வழங்கி வருகின்றன. இந்திய விமான நிறுவனங்கள் நினைத்தால் கோவை-துபாய்இடையே ‘நேரோபாடி’ ரகத்தைசேர்ந்த சிறிய விமானங்களை கொண்டு சேவை தொடங்க முடியும். அதே போல் விமான நிலைய எதிர்கால வளர்ச்சிக்கு விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டியதும் அவசியம். எனவே, மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ரயில் சேவை: பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொதுப்போக்கு வரத்து துறைகளில் ஒன்றாக ரயில்வே உள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவிற்கு இரவு ரயில் சேவை தொடங்க வேண்டும் என்பது 35 ஆண்டு கால கோரிக்கையாகும். தற்போது உள்ள கட்டமைப்பு மூலம் அதிக ரயில் சேவைகளை கொண்டு வர முடியும். திருப்பூரில் 2 நடைமேடைகள் மட்டுமே உள்ள நிலையில் தினமும்146 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஈரோட்டில் நான்கு நடைமேடைகளில் 176 ரயில்களும், சேலத்தில் 6 நடைமேடைகளில் 190 ரயில்களும் இயக்கப்படுகின்றன. கோவை ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகளில் 138 ரயில்கள் இயக்கப் படுகின்றன. எனவே, கோவையில் இருந்து அல்லது வட கோவை, போத்தனூர் ரயில் நிலையங்களில் இருந்து பெங்களூருவிற்கு இரவு நேர ரயில் இயக்க முடியும். இதற்கு கோவையில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT