சென்னை: வட சென்னை தொகுதியில் 18வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டு, கடந்த மார்ச்31-ம் தேதி முதல் சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வடசென்னையில் 35, தென் சென்னையில் 41, மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் என மாவட்டத்தில் மொத்தம் 107 பேர் போட்டியிடுகின்றனர்.
வட சென்னை தொகுதியில் 14லட்சத்து 96 ஆயிரத்து 224 வாக்காளர்கள், தென் சென்னையில் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133, மத்திய சென்னையில் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 என மொத்தம் மாவட்டத்தில் 48 லட்சத்து 69 ஆயிரத்து 518பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதற்கிடையில், மாவட்ட தேர்தல்அதிகாரிகள் தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஏற்கெனவே, முந்தைய தேர்தல்களில் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, விதிகளை மீறி வாக்களிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 579 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டிருந்தன. விதிமீறல்கள் நடைபெறகுறைவான வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றை பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி வட சென்னையில் தொகுதியில் 254, தென் சென்னையில் 456, மத்திய சென்னையில் 192என மொத்தம் 902 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டன. மேலும் இந்த 3தொகுதிகளில் வட சென்னையில்மட்டும் 18 வாக்குச்சாவடிகள் மிகவும்பதற்றமானவையாக அடையாளம்காணப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் தேர்தல் பார்வையாளர்களும்அந்த வாக்குச்சாவடிகளில் நேரில் ஆய்வு செய்து, அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல்அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு அலுவலர்களை நுண் பார்வையாளராக நியமிக்க இருக்கிறோம். மேலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரையும் நிறுத்த இருக்கிறோம்.
மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் ஆயுதம் ஏந்தியபோலீஸார் அல்லது துணை ராணுவப் படையினரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.