சென்னை: சென்னை மேம்பால முறைகேடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிய அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட அனுமதியை திமுக ஆட்சியில் திரும்பப் பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவையை சேர்ந்த தொழிலதிபரான மாணிக்கம்அத்தப்ப கவுண்டர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதில் ரூ.115 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி,2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில்முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோருக்கு எதிராக ஊழல் வழக்கு பதிய அனுமதிவழங்கப்பட்டு, குற்றப்பத்திரிகை யும் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், 2006-ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிய அனுமதி அளித்து, அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப்பெற்று, அந்த வழக்குகைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது சட்டத்துக்கு புறம்பானது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தற்போது தாமாகமுன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வரும்நிலையில் 2006-ம் ஆண்டு ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை நீதித்துறை மீதான நம்பிக்கையை கேலிக்கூத்தாக்கி விடும்.
எனவே, இதுதொடர்பாக 2006-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு எதிரான வழக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கை தொடர்ந்துள்ள மனுதாரர் இந்த வழக்கின் மெய்த்தன்மையை நிரூபிக்கும் வகையில் ரூ.1 லட்சத்தை வரும் ஏப்.25-ம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவி்ட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.