கோப்புப்படம் 
தமிழகம்

திருவள்ளூர் | உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.92 கோடி நகை பறிமுதல்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்/காஞ்சிபுரம்: திருவள்ளூர் அருகே பாண்டூரில் உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.92 கோடி மதிப்பிலான தங்கம்,வைரம் மற்றும் வெள்ளி நகைகளை நேற்று முன் தினம் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் அருகே பாண்டூர், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக திருப்பதியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், திருப்பதி பகுதியில் உள்ள பிரபல 5 தனியார் நகை கடைகள் மற்றும் நிறுவனத்தின் கிளைகளில் இருந்து, சென்னையில் உள்ள அந்த கடைகள், நிறுவனங்களின் கிளைகளுக்கு விநியோகம் செய்வதற்காக ரூ. 1 கோடியே 92 லட்சத்து 16 ஆயிரத்து 261 மதிப்பிலான, 2,775 கிராம் தங்கம், 14,021 கிராம் வெள்ளி, 0.880 கேரட் வைரம் ஆகியவை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி மூலம் திருவள்ளூர் சார் நிலைக்கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கார் ஒன்றை சோதனையிட்டபோது அதில் ரூ.1,66,500 பணம் கணக்கில் காட்டப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அதனை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். உரிய கணக்கை ஒப்படைத்து அந்தப்பணத்தை பெற்றுச் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT