நாமக்கல்: “இண்டியா கூட்டணியினர் கேலிக்கூத்து செய்து கொண்டுள்ளனர். திமுக கூட்டணிக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் பயனில்லாத வாக்கு” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து பரமத்தியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரமதர் மோடி 3-வது முறையாக பிரதமராக அமரும்போது தமிழகத்தில் இருந்து நிறைய பேர் எம்பியாக செல்ல வேண்டும்.
நாமக்கல்லில் தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திரம் படைக்கும். லாரி, கோழிப்பண்ணை மற்றும் நெசவுத் தொழில் மூலம் இந்தியாவின் வளர்ச்சியில் நாமக்கல் மாவட்டம் பெரும் பங்கு வகிக்கிறது. மோடி தாத்தா தான் 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.
இம்முறை 400 எம்பிகளுடன் பாஜக ஆட்சி அமைக்கும். திமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரியாது. இண்டியா கூட்டணியின் நிலைமை இப்படித்தான் உள்ளது. தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதுதான் முக்கியம். இண்டியா கூட்டணியினர் கேலிக்கூத்து செய்து கொண்டுள்ளனர். திமுக கூட்டணிக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் பயனில்லாத வாக்கு.
அமைச்சர் உதயநிதி, பிரதமர் மோடியை 29 பைசா மோடி என அழைப்பாராம். அடிப்படையில் எதுவுமே தெரியாத தற்குறி அவர். எனவே, நாமும் உதயநிதி ஸ்டாலினுக்கு பெயர் வைப்போம். கஞ்சா உதயநிதி ஸ்டாலின் என பெயர் வைப்போம். முதல்வருக்கு விலை உயர்வு முதல்வர் என பெயர் வைப்போம்.
சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என எல்லாத விலையும் உயர்த்திவிட்டு முதல்வர் ஸ்டாலின் பொய் பேசுகிறார். திமுக மற்றும் அதன் கூட்டணிக்குப் போடும் ஓட்டு பாவ ஓட்டு. அந்த பாவத்தை தமிழக மக்கள் செய்யக் கூடாது. திமுக அளித்த 517 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதி கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தேர்தல் அறிக்கையில் 295 வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதில் 295 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டது. அவை அனைத்தும் கனமான வாக்குறுதிகள். இவை 70 ஆண்டுகளாக நாட்டில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்” என்றார்.