கோவை: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள், அஞ்சல் வாக்கு செலுத்த ஆர்வம் காட்டவில்லை.
கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள், குண்டர் தடுப்புப் கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள் என 1,600-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குண்டர் தடுப்புப் பிரிவில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தின் மற்றொரு பகுதியிலுள்ள பெண்கள் சிறை வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் உள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, அஞ்சல் வாக்குகள் பெறுவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவினர் துரிதப் படுத்தியுள்ளனர்.
சிறை கைதிகளில், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகளுக்கு மட்டும் வாக்கு செலுத்தும் உரிமை உள்ளது. சிறைத்துறை கண்காணிப்பாளர் வாயிலாக, அஞ்சல் வாக்கு செலுத்த விரும்புவது குறித்து குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகளிடம் கேட்கப்படும். கைதிகள் விருப்பம் தெரிவித்தால், அவர் வசிப்பிடத்துக்கு உட்பட்ட உதவி தேர்தல் அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டு, அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான படிவம் பெறப்பட்டு, தொடர்புடைய கைதியிடம் வழங்கப்படும்.
அவர், தனியிடத்தில் வைத்து தான் விரும்பும் வேட்பாளருக்கு வாக்கை செலுத்துவார். பின்னர், அந்த வாக்குச்சீட்டு மீண்டும் தொடர்புடைய உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி, தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தினம் நெருங்குவதால், சிறைத் துறை அதிகாரிகள் குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகளிடம் விசாரித்துள்ளனர்.
இது குறித்து கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில் குமார் கூறும்போது, ‘‘கோவை மத்திய சிறையில் குண்டர் தடுப்புப் பிரிவில் 3 பெண் கைதிகள், 120 ஆண் கைதிகள் உள்ளனர். அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம் குறித்து இவர்களிடம் கேட்கப்பட்டது. ஆனால், அஞ்சல் வாக்கு செலுத்த யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இவர்கள் விருப்பம் தெரிவிக்கும் கால அவகாசமும் முடிந்துவிட்டது’’ என்றார்.