மதுரை: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மரியசெல்வி, உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது தாய் மாமன் அந்தோணி பாப்புசாமி, மதுரை உயர் மறைமாவட்டப் பேராயராக உள்ளார். இந்நிலையில், சிலரின் தூண்டுதலின் பேரில், அந்தோணி பாப்புசாமி மீதும், மேலும் சிலர் மீதும் அவதூறு பரப்பும் வகையில் வாரஇதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது பேராயரின் மரியாதையை சீர்குலைக்கும் வகையிலும், மதக்கலவரத்தை உருவாக்கும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே,சம்பந்தப்பட்டவர்கள் மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் குறிப்பிடும் சம்பவம் தொடர்பான வழக்கை, கொடைக்கானல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை ஏற்கமுடியாது. போதுமான ஆவணங்கள் இல்லாமல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 6 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத் துறை,செய்திகளை வெளியிடுவதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தனிமனித உரிமை, பத்திரிகை சுதந்திரம் மற்றும் சமூகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய பிரஸ் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது.
ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பு, அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். வழக்குமுடிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.