கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தன்னை வரவேற்று வள்ளி கும்மி நடனமாடியவர்களுடன் இணைந்து நடனமாடினார். 
தமிழகம்

பாஜக கையில் எடுத்த பின்னரே கச்சத்தீவு பிரச்சினையில் உண்மை வெளிவந்துள்ளது: அண்ணாமலை

செய்திப்பிரிவு

கோவை: கச்சத்தீவு பிரச்சினையை பாஜககையில் எடுத்த பின்னரே, மக்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சீமான் தினமும் ஒரு தத்துவம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் சரியான நேரத்தில் சின்னத்துக்கு விண்ணப்பிக்காமல், பாஜக மீது புகார் சொல்வதை ஏற்க முடியாது. ஜிகே வாசன், டிடிவி. தினகரன் ஆகியோர் முறையாக விண்ணப்பித்தார்கள். அதனால் அவர்களுக்கு சின்னம் கிடைத்தது.

முதல்வர் ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றார். அவர் வெளிநாடுகளுக்குச் சென்றதால் தமிழகத்துக்கு என்ன பயன்?வீதிக்கு வந்தால்தான் மக்கள் உணர்வுகள் தெரியும். பிரதமரைப்போல முதல்வர் ‘ரோடு ஷோ’ நடத்த தயாரா? பிரதமரைப் போல முதல்வர் உழைக்கிறாரா?

பணம் அதிகம் உள்ளவர்களிடம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துகின்றனர். 2021 தேர்தலுக்கு முன் திமுக-வினர் வேல்தூக்கினர். இன்று ஆ.ராசா தான்ராமர் பக்தர், அயோத்தி சென்றுள்ளேன் என்கிறார். மறதி தான் ஜனநாயகத்தில் பெரிய வியாதி. சனாதனத்தை எதிர்த்தால், அதே நிலைப்பாட்டில் தொடர்ந்து நிற்க வேண்டியதுதானே?

கச்சத்தீவு பிரச்சினையை பாஜக கையில் எடுத்த பின்னரே,மக்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. ஆர்டிஐ ஆவணங்களை பொய் என்று அபத்தமாக கூறிவருகின்றனர்.

கொச்சையாகப் பேசுவதில் முதன்மையாகத் திகழ்கிறார் உதயநிதி ஸ்டாலின். மரியாதையைக் கொடுத்து, மரியாதையைப் பெற வேண்டும். பணப் புழக்கத்தை தடுக்க, பறக்கும் படைகளை அதிகரிக்க வேண்டும்.

பணம் வாங்கிவிட்டு வாக்கு செலுத்தவில்லை என்றால், கேமராமூலம் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவினர் கோவையில் கூறி வருகின்றனர். ஜூன் 4-ம் தேதி கோவையில் புதிய வரலாறு படைக்கப்படும். இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக தந்தை பெரியார் கருத்துகூறியுள்ளார். திமுக ஏன் பெரியார்குறித்து பேசவில்லை? இந்தியைதிணித்தது காங்கிரஸ். அவர்களுடன் கூட்டணியில் திமுக இருப்பது ஏன்? இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

வள்ளிகும்மி நடனம்: கோவை வெள்ளக்கிணறு பகுதியில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டபோது, அப்பகுதியினர் வள்ளிகும்மி நடனமாடி வரவேற்றனர். அவர்களுடன் அண்ணாமலையும் இணைந்து நடனமாடினார். அங்கு பேசும்போது 2024-ல் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் அமர்ந்த பின்னர், வள்ளிகும்மிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு, நாடு முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT