தஞ்சாவூர்: ஆந்திராவில் தனியார் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில், ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியராக பணியாற்றியவர் எஸ்.ராஜ சவுந்தர் ராஜன்(59). இவர் கடந்த 2020-ல்ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தனியார் கல்வியியல் கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்புகளை ஆய்வு செய்ய,தேசிய கல்வியியல் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினராகச் சென்றிருந்தார்.
ஆனால், கட்டமைப்புகளை முறையாக ஆய்வு செய்யாமல், கல்வியியல் கல்லூரி தொடங்குவதற்கான அனுமதிச் சான்றிதழை ராஜ சவுந்தர் ராஜன் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின்பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், ராஜ சவுந்தர்ராஜன் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சான்றிதழ் வழங்கியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி, ராஜசவுந்தர ராஜனை பணியிடை நீக்கம்செய்து நேற்று உத்தரவிட்டுள்ளதாக, தஞ்சாவூர் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தனராஜன் தெரிவித்தார்.