தமிழகம்

தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 430 மி. யூனிட் உயர்ந்து உச்சம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் தினசரி மின்நுகர்வு எப்போதும் இல்லாத அளவாக 430.13 மில்லியன் யூனிட்களாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் முழுவதும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு மின்நுகர்வு எனப்படுகிறது. தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 300 மில்லியன் யூனிட்களாக உள்ளது.

இது கோடை காலத்தில் 350 மில்லியன் யூனிட்களாக அதிகரிக்கும். கடந்த ஆண்டு ஏப்.20-ம் தேதி தினசரி மின்நுகர்வு 423.785 மில்லியன் யூனிட்களாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்சபட்ச அளவாக இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோடைகாலம் தற்போது தொடங்கி, கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், தினசரி மின்நுகர்வு அதிகரித்துள்ளது. இதன்படி, கடந்த மாதம் 29-ம் தேதி தினசரி மின்நுகர்வு எப்போதும் இல்லாத அளவாக 426.439 மில்லியன் யூனிட்களாக அதிகரித்தது.

இந்தச் சூழலில், தினசரி மின்நுகர்வு மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி, நேற்று முன்தினம் (2-ம் தேதி) தமிழகத்தில் மின்நுகர்வு 430.13 மில்லியன் யூனிட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து, மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘தமிழகத்தில் மின்நுகர்வு ஏப்.2-ம் தேதியன்று 430.13 மில்லியன் யூனிட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மின்வெட்டு இல்லாத நிலையை எட்டியுள்ளோம். கூடுதல் மின்சாரத் தேவை நுகர்வு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’ என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT