கள்ளக்குறிச்சி: “திருமண மண்டபம் மாறி கடலூர் வந்துள்ள எனது மைத்துனரான விஷ்ணு பிரசாத் டெபாசிட் இழக்க வேண்டும். உலகமறிந்த நம்ம மாப்பிள்ளை தங்கர் பச்சானே எனக்கு முக்கியம்” என திட்டக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசினார்.
பாஜக கூட்டணியில் அமைந்து பாமக, கடலூர் தொகுதியில் தனது கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சானை நிறுத்தியுள்ளது. அவருக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று கடலூர், பண்ருட்டி மற்றும் திட்டக்குடி ஆகிய சட்டபேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றது. அப்போது அவர் திட்டக்குடியில் தங்கர் பச்சானுக்கு வாக்கு சேகரித்து பேசுகையில், ''இங்கு பாஜக கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியினர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். அவர் எனது மைத்துனர் தான். அவர் ஏன் தொகுதி மாறி வந்து போட்டியிடவேண்டும். அவர் எனது மைத்துனராகவே இருந்தாலும், அவர் டெபாசிட் இழக்கவேண்டும். அவருக்கும் இந்த தொகுதிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? ஆனால் தங்கர் பச்சான் உங்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர். அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்யவேண்டும்.
திங்கள்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் விஷ்ணு பிரசாத் பேசும்போது, தற்போது நடைபெறுகின்ற தேர்தல் திருமணம் போன்றது எனவும், தான் இங்கு மாப்பிள்ளை எனவும், தான் அணிந்திருக்கும் சட்டை அமைச்சருடையது எனவும் பேசியுள்ளார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதோ இங்கே நிற்கிறாரே இவர்தான் நம்ம மாப்பிள்ளை. இங்கே நிற்கிறாரே தங்கர் பச்சான், அவரே உள்ளூர் மாப்பிள்ளை.
இங்குள்ள மக்களுக்குத் தெரியும், உலகமறிந்த மாப்பிள்ளை. ஆனால் விஷ்ணு பிரசாத் கல்யாண மண்டபம் மாறி வந்துள்ளார். அவருக்கான கல்யாண மண்டபம் ஆரணி தொகுதியில் உள்ளது. இது கடலூர் தொகுதி, இங்கு உள்ளது நம்ம மண்டபம். நமது மாப்பிள்ளை தங்கர் பச்சான், அவரா வெற்றி பெற்றாக வேண்டும். இன்னொரு வேட்பாளர் சிவக்கொழுந்து, பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ, அவர் ஏதாவது உங்களுக்கு செய்திருக்கிறாரா?!
எண்ணிப் பாருங்கள். எனவே, தங்கர்பச்சான் அடிப்படை விவசாயி, சிறந்த படைப்பாளர், உங்களுக்காக உழைக்கக் கூடியவர். திமுக, அதிமுக நாட்டை சீரழித்து வருகின்றனர். தமிழகம் மோசமான நிலையில் மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. நாம் ஆட்சிக்கு வரவேண்டும் அப்போதுதான் மோசமான நிலை மாறும். ஒருபுறம் ஸ்டாலினும், மறுமபுறும் எடப்பாடி பழனிச்சாமியும், நாம் ஏதோ துரோகம் செய்தது போல் ராமதாஸை விமர்சனம் செய்து வருகின்றனர்.
நாங்கள் உங்களுக்கு எப்போது துரோகமிழைத்தோம். மாறாக உங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம். திமுகவையும், அதிமுகவையும் ஒவ்வொரு முறையையும் தோளில் சுமந்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம். துரோகம் எங்கள் பரம்பரையிலோ ரத்தத்திலோ கிடையாது. நாங்கள் பாட்டாளிகள், மற்றவர்களுக்கு உயிர் கொடுத்தவர்கள். நாங்கள் தியாகம் செய்தவர்கள். ஆனால் நீங்கள் துரோகம் செய்தவர்கள். எனவே, இந்தத் தேர்தலில் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல், தங்கர் பச்சானுக்கு வாக்களியுங்கள்'' என்றார் அன்புமணி.
முன்னதாக, “தேர்தல் களத்தில் மாமனாவது, மச்சானாவது! உறவு வேறு, அரசியல் வேறு. எனக்கு கொள்கையே முக்கியம்” என்று கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், பாமக தலைவர் அன்புமணியின் மைத்துனருமான விஷ்ணு பிரசாத் பேசினார். அதன் முழு விவரம்: “தேர்தல் களத்தில் மாமனாவது, மச்சானாவது!” - அன்புமணி மைத்துனர் விஷ்ணு பிரசாத்