புதுச்சேரி: உள்ளூர் அரசியலை விரும்பிய மருமகனை, மாமனார் தேசிய அரசியலுக்கு நகர்த்தியுள்ளது தான் புதுச்சேரியில் விறுவிறுப்பு பேச்சாகவுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் முதல்வராக இருந்தவர் ரங்கசாமி. கட்சி உள் ஆட்டங்களால் அவர் முதல்வர் பதவி பறிக்கப்பட்டதையடுத்து மாநில அந்தஸ்து கோஷத்தை முன்வைத்து 2011ல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கி உடனடியாக ஆட்சியை பிடித்தார் ரங்கசாமி. அப்போது காங்கிரஸ் மாநிலத் தலைவராக நமச்சிவாயம் நியமிக்கப்பட்டார். ரங்கசாமியின் அண்ணன் மகளை மணந்ததால், அவருக்கு மருமகன் முறைக்கு நமச்சிவாயம் வருவார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த நமச்சிவாயம் தொடர்ந்து கட்சியை வளர்த்து 2016-ல் கடும் பிரசாரம் செய்தபோது முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அதே கனவுடன் அதிக எம்எல்ஏக்களை காங்கிரஸ் வென்றபோது, தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வர் பதவியை கைப்பற்றினார். முதல்வர் கனவு கலைந்ததால் நமச்சிவாயம் அதிருப்தியில் இருந்தார். 2021ல் காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் நமச்சிவாயம் இணைந்தார்.
2021 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸுடன் பாஜக கூட்டணி அமைத்து வென்றது. தற்போது உள்துறை, கல்வி என முக்கியப் பொறுப்புகளை வகித்துவரும் ரங்கசாமிக்கு அடுத்த இடத்தில் நமச்சிவாயம் அமைச்சரவையில் உள்ளார். கூட்டணி ஆட்சி அமைந்த போது நியமன எம்எல்ஏக்கள் மூவரையும் பாஜகவே நியமித்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பாஜகவே தன்வசம் வைத்துக் கொண்டது. தற்போது மக்களவைத் தேர்தலில் பாஜகவே போட்டியிட முடிவு எடுத்தற்கும் ரங்கசாமி ஏற்றார்.
அதன் பிறகு ரங்கசாமியை பாஜக மேலிடம் சந்தித்தபோது, "அமைச்சர் நமச்சிவாயம்தான் சரியான வேட்பாளர். அவரை நிறுத்தினால் வெற்றி பெற வைக்கிறேன்" என்று குறிப்பிட்டதுதான் டிவிஸ்ட். மாநில அரசியலில் அடுத்த முதல்வராக ஆகும் விருப்பத்துடன் தொகுதி தோறும் பணியாற்றி வந்த நமச்சிவாயத்தை கட்சி மேலிடம் கேட்டபோது, "நான் உள்ளூர் அரசியலில் ஈடுபடவே விருப்பப்படுகிறேன். யாரை நிறுத்தினாலும் வெல்ல வைக்கிறேன்" என்று உறுதி தந்தார்.
பாஜக போட்டியிடுவதாக அறிவித்து ஒன்றரை மாதங்களாகியும் பல வேட்பாளர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் ரங்கசாமியோ, வேட்பாளர் நமச்சிவாயம் என்பதில் உறுதியாகவே இருந்தார். இறுதியில் தேர்தலில் வென்றால் மத்திய அமைச்சர் பதவி கேட்டு பெறலாம் என்றும் முதல்வர் ரங்கசாமி நமச்சிவாயத்திடம் பேசினார். ஆனால் நமச்சிவாயமோ, "எனக்கு எதுவும் வேண்டாம் மாநில அரசியலே போதும்" என்று திரும்ப, திரும்ப கூறி வந்தார்.
இறுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு தேர்தலில் போட்டியிட கூறி முக்கிய வாக்குறுதி தந்ததால் போட்டியிட சம்மதம் தெரிவித்தார். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் இதை முதல்வர் ரங்கசாமியே வெளிப்படுத்தினார். "தென் பகுதியில் இருந்து வென்று சென்றால் பிரதமரிடம் உரிமையுடன் அமைச்சர் பதவி கேட்கலாம். ஆனால் அமைச்சர் நமச்சிவாயம் விரும்பமாட்டார். அவர் இங்கே இருக்கவே விருப்பம். ஆனால் அவர் மத்திய அமைச்சராக வாய்ப்புண்டு என வலியுறுத்தி இங்கே நிறுத்தப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டார்.
அடுத்த முறை முதல்வராகலாம் என்று மருமகன் விரும்பிய சூழலில், காய்நகர்த்தி அவரை தேசிய அரசியல் நோக்கி மாமனார் நகர்த்துகிறார் என்று வெளிப்படையாக கட்சியினர் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்திலும் ரங்கசாமி முழுவீச்சில் இறங்கத் தொடங்கி யுள்ளார். அமைச்சர் பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்யாமல் களத்தில் நிற்கிறார். அவரிடம் உள்ள அமைச்சர் பதவியை பெற பாஜகவில் எம்எல்ஏக்கள் இப்போதே போட்டியிடத் தொடங்கியுள்ளதால் தேர்தல் களம் புதுச்சேரியில் விறுவிறுப்பு அடையத் தொடங்கியுள்ளது.