திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஸ்ரீரங்கத்தில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: பன்முகத்தன்மை, விரிந்தநோக்கு இல்லாத எந்த அரசும் ஆபத்தானது. அந்த அரசு குடியுரிமை சட்டங்கள், அரசியல் அமைப்பு சட்டங்களில் கை வைக்கத் தொடங்கும். அரசுகளை விமர்சிக்க வேண்டியது நமது கடமை.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீங்கள் அந்த கடமையை செய்தால் தான் நாடுநலமாக இருக்கும். தமிழக மக்கள் மீதும், இந்தியா மீதும் எனக்கு உள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. திராவிட மாடல்படி நடந்தால் இந்தியாவின் நுழைவாயில் (கேட்வே ஆஃப் இந்தியா) தமிழகத்தில் தான் இருக்கும்.
தமிழகத்திடமிருந்து ஒரு ரூபாயை வசூலிக்கும் மத்திய அரசு, திரும்ப 29 பைசா தான் தருகிறது. ஆனால் உத்தர பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களுக்கு ரூ.2-க்கு மேல் மத்திய அரசு திருப்பித் தருகிறது.
நம் வரிப்பணத்தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் வளர்ச்சியடைந்தால் நமக்கு சந்தோஷம் தான். ஆனால், அங்குள்ளவர்கள் வேலை தேடி தமிழகத்துக்குத்தான் வருகிறார்கள். உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் குறைவாக விற்றபோது, நம்மிடம் அதிக லாபத்துக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்த அரசு அங்கே அமர்ந்துள்ளது. அதை நினைவுப்படுத்தத்தான் வந்துள்ளேன்.
வேறுஎதுவும் கேட்டு வரவில்லை. எனக்காக இல்லை. இதில் எனது கட்சிக்காரர்களுக்கு நிறைய வருத்தம் இருக்கும். ‘நோ பெயின், நோ கெய்ன்’. வலியை தாங்கிக் கொள்ளுங்கள். தமிழக மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலப்பதில்லை என்று பேசுகின்றனர்.
கட்டபொம்மன், சிதம்பரம் என்ற பெயர் உள்ள யாரையாவது வடநாட்டில் பார்க்கமுடியுமா? ஆனால் இங்கு ஒரு தெருவுக்குள் சென்று போஸ், காந்தி, நேரு என்றால் 4 பேர் திரும்பிப் பார்ப்பார்கள். நாங்களா தேசிய நீரோட்டத்தில் கலக்காதவர்கள்? நீங்கள் தான் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்றார்.