அர்ஜுன் சம்பத் 
தமிழகம்

திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

ஆர்.ஆதித்தன்

கோவை: மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்படுவதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

கோவையில் அவர் `இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு 10 ஆண்டுகளில் ரூ.11.50 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் கிராமம்தோறும் குடிநீர் இணைப்பு, பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் 17 லட்சம் வீடுகள், முத்ரா திட்டத்தில் அதிக கடனுதவி என பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு மிகவும் நெருக்கமாக மாறிவிட்டார்.

காவிரி நீர் பங்கீடு, மேேகதாட்டு அணை விவகாரம், மீனவர் நலன்,உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்டது என தமிழக மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறார். எனவே, பிரதமர் மோடி அலை வீசுகிறது.

கோவை பாஜகவின் கோட்டை. திமுகவின் இந்து விரோதப் போக்குக்கு எதிராக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்து சமூகத்தினருக்கு துணை நின்றனர். அதனால் திமுகவை தோற்கடிக்க, பெரும்பாலான இந்துக்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர். தற்போது பாஜக கூட்டணியில் அதிமுகஇல்லாமல் இருந்தாலும், அண்ணாமலை வெற்றி பெறுவது உறுதி.

பிரதமர் மோடி ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மீது மரியாதை வைத்திருந்தார். அவர்கள் மறைந்த போது துக்க நிகழ்வில் பங்கேற்றார். அதேநேரத்தில், அரசியல் நிலைப்பாடு என்று வரும்போது, பாஜக லஞ்சம், ஊழல், குடும்ப அரசியலை எதிர்ப்பதில் சமரசம் செய்து கொள்வதில்லை. .

தமிழகத்தில் தேசிய சக்தி காலூன்றுவதை திராவிட கட்சிகள் விரும்புவதில்லை. மாறிமாறி கூட்டணி வைத்த காங்கிரஸ்அழிந்துவிட்டது. திராவிட மாடலுக்கு மாற்று தேசிய மாடல்தான். அதிமுக-திமுக சேர்ந்து பாஜகவை தோற்கடிக்க மறைமுகக் கூட்டணி அமைத்துள்ளன. இனி வரும் காலங்களில் வெளிப்படையான கூட்டணி அமையும்.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது அரசியல் சாசன சட்டப் பிரிவு 356-ஐ பலமுறை பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்துள்ளது. ஆட்சியைக் கலைப்பது காங்கிரஸுக்கு கைவந்த கலை. ஆனால், பாஜகமாநிலக் கட்சிகளுடன் நல்லுறவோடு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆளும்கட்சியான திமுகவுக்கு, அரசு அதிகாரிகள் ஆதரவாகவும், ஒருதலைப்பட்சமாகவும் செயல்படுகின்றனர். திமுகவினரின் வாகனங்களை பெயரளவுக்கு மட்டும் சோதனையிடுகின்றனர். பண பலம், அரசியல் பலத்தை வைத்து தேர்தலில்வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது.

திமுகவுக்கு ஆதரவாகச்செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் வாக்காளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடக்கும் வகையில், தமிழக ஆளுநர் திமுக அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT