வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு சேகரித்து, புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி சந்திப்பு அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார் 
தமிழகம்

மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்க திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கொளத்தூர், தண்டையார்பேட்டை பகுதியில் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியையும், புரசைவாக்கத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனையும் ஆதரித்து, அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கடும் நிதி நெருக்கடியிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை அறிமுகம் செய்தார் முதல்வர். இதனால், 3 ஆண்டுகளில் பெண்கள் 460 கோடி தடவை பயணங்கள் செய்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளைக் கொண்டு பாஜக மிரட்டுகிறது.

அதுபோல திமுக அமைச்சர்களை மிரட்ட முடியாது. தமிழ்நாட்டில் இருந்து செலுத்தப்படும் ஜிஎஸ்டி வரியில் ரூ.1 செலுத்தினால் மத்திய அரசு நமக்கு 29 பைசா மட்டுமே திரும்ப தருகிறது. மாநில உரிமை நசுக்கப்படுகிறது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு இன்னமும் கட்டி முடிக்கவில்லை. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கே வந்துவிட்டது.

தமிழ் மீது பற்றுள்ளவாறு பேசும்பிரதமர், தமிழின் வளர்ச்சிக்கு பணம் ஒதுக்காமல் சம்ஸ்கிருதத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கியுள்ளார். சமையல் எரிவாயு, பெட்ரோல் எனஅனைத்து விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

அண்மையில் கனமழை பெய்தபோது முதல்வர் உள்ளிட்டஅனைவரும் களத்தில் இருந்தோம்.தமிழகத்தில் புயல், வெள்ள பேரிடர்காலங்களில் பிரதமர் வரவும் இல்லை. ஒரு பைசாகூட நிதியும் தரவில்லை. இதை எதிர்க்கட்சித் தலைவர் தட்டிக் கேட்கவில்லை.

எண்ணூர் வரை மெட்ரோ ரயில்நீட்டிக்கப்படும், துறைமுகம் தொகுதியில் துணை மின்நிலையம் அமைக்கப்படும், வில்லிவாக்கத்தில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படும், விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும், வீட்டு மனைப்பட்டாவும் வழங்கப்படும்.

இதுபோல பல்வேறுவாக்குறுதிகளை அளித்துள்ளோம். ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள். ஜூன். 4-ம் தேதி வாக்குஎண்ணிக்கை. அதில், 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று அவருக்கு பரிசாக அளிக்க வேண்டும்.

வடசென்னை, மத்திய சென்னையைத் தொடர்ந்து தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்தும் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

SCROLL FOR NEXT