புதுடெல்லி: சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக 6 மாநிலங்களில் பதியப்பட்டுள்ள வழக்குளை ஒரே வழக்காக மாற்றக் கோரிய மனு மீதானவிசாரணையை மே மாதத்துக்கு தள்ளி வைத்துள்ள உச்ச நீதிமன்றம், கோரிக்கை தொடர்பாக மனுவில் 3 வாரங்களில் தேவையான மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் கடந்தாண்டு செப்.2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில் பங்கேற்று பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் சமூக நீதிக்கு எதிரானது என்றும், சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனவும் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்தது. பல்வேறு மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்காக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், பிஹார், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக ஒரே வழக்காக மாற்றக் கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில்உச்ச நீதிமன்றத்தில் மனு ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘இந்த மனுவை அரசியல் சாசனச் சட்டம்பிரிவு 32-ன் கீழ் தாக்கல் செய்துநிவாரணம் கோர முடியாது. இந்தவிவகாரத்தில் மாநிலத்தின் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சர் பேசும்போது கவனமுடன் பேசியிருக்க வேண்டும்’’ என்றனர்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன், சித்தாலே ஆகியோர். ‘‘பல்வேறு வழக்குகளால் ஏற்படும் குழப்பத்தை தவிர்ப்பதற்காக 6 மாநிலங்களில் பதியப்பட்டுள்ள வழக்கை ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டுமெனக் கோருகிறோம். தவிர இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரவில்லை. ராஜஸ்தானில் பதியப்பட்டுள்ள கூடுதல் வழக்கு விவரங்கள் மற்றும் இந்த வழக்குகளை ஒன்றாக இணைப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்குள்ள அதிகாரம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை’’ என்றனர்.
நீதிபதிகள் கேள்வி: அப்போது நீதிபதிகள், ‘‘அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்குகளை ஒன்றிணைத்து ஒரே வழக்காக மாற்ற பிரிவு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பை பயன்படுத்த முடியுமா? அல்லது குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பிரிவு 406-ஐ பயன்படுத்த வேண்டுமா?’’ எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘நுபுர் சர்மாவுக்கு பொருந்தும் சட்டம், உதயநிதிக்கும் பொருந்தும். உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு அடுத்த விசாரணையின்போது பதிலளிக்கப்படும்’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரரின் பேச்சால் அடிப்படை உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது எனும்போது அதற்கு நிவாரணம் கோரி அரசியல் சாசன பிரிவு 32-ன் கீழ் மனு தாக்கல் செய்ய முடியாது. இந்த மனுவில் தேவையான மாற்றங்களை 3 வார காலத்துக்குள் மேற்கொள்ள வேண்டும்’’ என அறிவுறுத்தி விசாரணையை மே 6-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.