தமிழகம்

ஓசூரில் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் 76 பவுன், ரூ.1.26 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை சோதனை நிறைவு

செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூரில் கல்குவாரி உரிமையாளர் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத ரூ.1.26 கோடி ரொக்கம், 76 பவுன் நகை மற்றும்ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜலகண்டேஸ்வரர் நகரைச் சேர்ந்த லோகேஷ்குமார். இவர்பேரண்டப்பள்ளியில் கல்குவாரி மற்றும் கிரஷர் நடத்தி வருகிறார். இவர் கடந்த 28-ம் தேதிபெங்களூருவிலிருந்து ஆவணமின்றி காரில் எடுத்து வந்த ரூ.10 லட்சத்தை ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வருமானவரித் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, ஓசூர் வருமானவரித் துறை உதவி இயக்குநர்விஷ்ணுபிரசாந்த் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் லோகேஷ்குமார் வீடு மற்றும் பேரண்டப்பள்ளியில் உள்ள குவாரியில் சோதனையில் ஈடுபட்டனர். விடியவிடிய நடந்த சோதனை 2-வது நாளான நேற்று மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது.

இதுதொடர்பாக உள்ளூர் போலீஸார் கூறும்போது, “லோகேஷ் குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.26 கோடி ரொக்கம் மற்றும் ஒன்றரை கிலோ தங்கம் இருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடந்தது. இதில், கணக்கில் வராத 76பவுன் நகை, ரூ.1.26 கோடி மற்றும்சில ஆவணங்களைப் பறிமுதல்செய்தனர். மேலும், இதுதொடர்பாக சம்மன் அனுப்பும்போது வருமானவரித் துறைஅலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்” என்றனர்.

SCROLL FOR NEXT