மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வீடுவீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் வேப்பேரியில் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். படம்: எஸ்.சத்தியசீலன் 
தமிழகம்

சென்னையில் வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் தொடக்கம்: ஏப்ரல் 13-ம் தேதிக்குள் முடிக்க திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் வாக்காளர் தகவல்சீட்டு விநியோகம் நேற்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 13-ம்தேதிக்குள் விநியோகத்தை முடிக்க திட்டமிட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில், மாவட்ட கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகளில் மட்டும் 39 லட்சத்து25 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி சீட்டு வழங்கப்படும்.

அதில் வாக்காளர் விவரம் மற்றும் பட்டியலில் எந்த வரிசை எண்ணில் அவரது பெயர் உள்ளது.வாக்குச்சாவடி எண் ஆகியவை இடம்பெறும். இதை மட்டுமே காண்பித்து, வேறு ஆவணங்களை காண்பிக்காமல் வாக்களிக்கலாம்.

இந்த முறை வாக்குச்சாவடி சீட்டுக்கு பதிலாக, வாக்காளர்களின் புகைப்படம் இன்றி, மற்ற விவரங்கள் இடம்பெற்ற வாக்காளர் தகவல் சீட்டை வழங்குவது என தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி சென்னை மாவட்டத்தில் வீடு வீடாக வாக்காளர் தகவல்சீட்டு விநியோகம் தொடக்க நிகழ்ச்சி, வேப்பேரியில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டுகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 3 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டை வழங்கதிட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் வாக்காளர் கையேடும் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பணியை வரும் 13-ம்தேதிக்குள் முடிக்க இருக்கிறோம்.இப்பணியில் 364 கண்காணிப்பாளர்கள், 3 ஆயிரத்து 519 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் 938 அமைவிடங்களில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளன. இதில்பதற்றமானதாக 579 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 18 வாக்குச் சாவடிகளை அடையாளம் கண்டு வருகிறோம்.தேர்தல் பார்வையாளர்களுடன் கலந்தாலோசித்து இறுதி செய்யப்படும்.

அங்கு நுண் பார்வையாளர்கள், கூடுதல் துணை ராணுவப் படையினர் நியமிக்கப்படுவார்கள். வாக்குச் சாவடி அலுவலர்கள் 20 ஆயிரம் பேருக்கு முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 1500 பேர் பயிற்சிக்கு வராமல் இருந்தனர். அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) சுரேஷ் உடனிருந்தார்.

SCROLL FOR NEXT