மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்துக்கு திமுகவே காரணம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதுரை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனை ஆதரித்து முனிச்சாலை பகுதியில் நேற்று மாலை தமாக தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மதுரை தொகுதி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பெற்று, மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.
இதற்காக நமது மீனாட்சி சொக்கரின் பொற்றாமரை மலர் தாமரை சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்துக்கான மத்திய அரசின் திட்டங்கள் காலமுறைப்படி சரியாக நிறைவேற்றப் படுகின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்துக்கு திமுகவே காரணம். அவர்களது வாய் முகூர்த்தத்தால்தான் தாமதமாகிறது. மதுரை மட்டுமின்றி தென் மாவட்ட மக்களுக்கு எய்ம்ஸ் அவசியம். அது தாமதமாக வந்தாலும், சரியான நேரத்தில் வரும்.பிரதமர் மோடியே நேரில் திறந்துவைக்க மதுரைக்கு வருவார், என்றார்.
தமாகா முன்னாள் எம்எல்ஏ கேஎஸ்கே.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. உடையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், துணைத் தலைவர் ஜோதி மணி வண்ணன், பொதுச்செயலாளர் கருட கிருஷ்ணன், வழக்கறிஞர் முத்துக் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.