தமிழகம்

மகப்பேறு மருத்துவர் இல்லாமல் பிரசவம்: கொடைக்கானல் அரசு மருத்துவமனையின் அவலம்

செய்திப்பிரிவு

கொடைக்கானல் அரசு மருத்துவ மனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாததால் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் அரசு தாலுகா மருத்துவமனையில் 7 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். மாதந்தோறும், 12 முதல் 15 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் 3 முதல் 5 பெண்களுக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை (சிசேரியன்) மூலம் குழந்தைகள் பிறக்கின்றன.

கொடைக்கானல் நகரமானது சர்வதேச சுற்றுலா இடம் என்பதுடன், தமிழகத்தில் மலைக்கிராமங்கள் அதிகமுள்ள பகுதியாகவும் விளங்குகிறது. அதனால், கொடைக்கானல் மருத்துவமனையை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையான மருத்துவ வசதிகள், சிறப்பு மருத்துவர்களை நியமிப் பது அவசியம். ஆனால், இந்த மருத்துவமனையில், தற்போது தாலுகா மருத்துவமனை அளவிலே மருத்துவ வசதிகள், மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு மருத்துவரே இல்லை. மற்ற மருத்துவர்கள்தான் மகப்பேறு அறுவைசிகிச்சை மேற்கொள் வதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பெண்கள் சிலர் கூறியது: மகப்பேறு அறுவை சிகிச்சை மருத்துவரை நியமித்தால், உடனே அவர்கள் பணியிடமாற்றம் வாங்கி சென்றுவிடுகின்றனர். கொடைக்கானலில் மகப்பேறு மருத்துவர், நிரந்தரமாக தங்கியி ருந்து சிகிச்சை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அவசர மகப்பேறு அறுவை சிகிச்சைக ளுக்கு தற்காலிக பணி (டெபுடேசன்) என்ற பெயரில் வத்தலகுண்டு, பழனியில் இருந்து மகப்பேறு மருத்துவர்கள் கொடைக்கானல் வந்து செல்கின்றனர். பிரசவ நேரங்களில், சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்பில்லாதபோதுதான் மகப்பேறு அறுவைசிகிச்சை குறித்து உடனடியாக முடிவு எடுக்கப்படுகிறது. அதனால், அந்த அவசர காலத்தில் பழனி, வத்தலகுண்டில் இருந்து மருத்துவர் கொடைக்கானல் மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிரந்தர மகப்பேறு மருத்துவரை கொடைக்கானலில் நியமிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் ரவிகலா கூறியது: கொடைக்கானலுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்துசெல்வதால் இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. வத்தலகுண்டு, பழனியில் இருந்து மகப்பேறு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் ஷிப்ட் முறையில் கொடைக்கானல் சென்றுவிடுவதால் தற்போது மகப்பேறு அறுவை சிகிச்சையில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஆனாலும், நிரந்தரமாக மகப்பேறு மருத்துவரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT