கோவில்பட்டி: தகுதி குறித்து கடம்பூர் ராஜு பேச வேண்டாம்.. அவருக்கு நாவடக்கம் தேவை என கோவில்பட்டியில் நடந்த தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
கோவில்பட்டியில் இண்டியா கூட்டணி தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை வகித்து, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:
பாஜக தேர்தல் பத்திரம் மூலம் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்துள்ளது. எவ்வளவு வேண்டுமானாலும் பாஜகவுக்கு நன்கொடை கொடுக்கலாம். யார் கொடுத்தார்கள் என வெளியே சொல்ல வேண்டியதில்லை. அந்த பணத்துக்கு வருமான வரி, சேவை வரி கிடையாது. 44 நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்துள்ளனர். இதில், 30 நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் கனிமொழி குறித்து இல்லாததை வெளியே பேசுகின்றனர். அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இதற்கு முன்பிருந்த எம்.பி.யின் பெயரைக் கூட நிறைய பேர் மறந்துவிட்டனர். ஆனால், கனிமொழி எம்.பி. கடந்த 5 ஆண்டுகளான மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியுள்ளார்.
அதிமுக இவ்வளவு நாள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது. மோடியின் செயல்பாடு கள் குறித்து பழனிசாமி பேசவில்லை. அதிமுகவுக்கு வாக்களிக்கக்கூடாது என மக்க ளிடம் எடுத்துக்கூற வேண்டும்.
கடம்பூர் ராஜு பிரச்சாரத்தின்போது வாக்கு கேட்காமல், என்னை பற்றியும், கனிமொழி எம்.பி. குறித்தும் பேசியுள்ளார். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். நீங்கள் தகுதி குறித்து பேச வேண்டியதில்லை. உங்களுக்கு நாவடக்கம் தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து வாக்கு சேகரிப்பது குறித்து கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.